திங்கள், 19 ஏப்ரல், 2010
அமெரிக்காவுக்கு மாற்றுப் பாதையில் இந்திய விமானங்கள் இயக்கம்!
டெல்லி: ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பால் சூழ்ந்துள்ள சாம்பல் மண்டலத்தால் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கா வுக்கான இந்திய விமான சேவை மாற்றுப் பாதையில் மீண்டும் துவங்கியது.
ஐஸ்லாந்து எரிமலையின் சாம்பல் 30க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளின் மீது மிதக்கின்றன. இதன் அடர்த்தி அதிகமாக உள்ளதால் விமானங்களை இயக்க முடியாமல் கடந்த 5 நாட்களாக விமான நிறுவனங்கள் தவிக்கின்றன. பயணிகள் ஆங்காங்கே விமான நிலையங்களில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்தாகியுள்ளன. பல லட்சம் பயணிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். பல கோடி நஷ்டத்தை விமான நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.
இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு செல்லும் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமான பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவுக்கு மீண்டும் விமானங்களை இயக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி இடையில் நிற்காமல் மும்பை-நியூயார்க்-மும்பை செல்லும் விமானமும், டெல்லி-நியூயார்க் -மும்பை விமானமும் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. இரண்டும் போயிங் 777 ரக விமானங்கள் ஆகும். வழக்கமான பாதையில் செல்லாமல் மாற்றுப் பாதை வழியாக இந்த விமானங்கள் அமெரிக்கா செல்லும். அதே நேரத்தில், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகருக்கு செல்லும் விமானங்கள் இன்னமும் இயக்கப்படவில்லை.
விமானப் போக்குவரத்தை தொடங்கி இருப்பதால் மறுபடியும் டிக்கெட் பதிவு செய்தல், விமான டிக்கெட்டை மாற்றுதல், ரத்து செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களில் சிறப்பு அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக