வியாழன், 29 ஜூலை, 2010

இந்தியாவில் செல்பேசி விற்பனை 18.5% அதிகரிக்கும்!


செல்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 2010ஆம் ஆண்டில் மட்டும் செல்பேசி விற்பனை 18.5 விழுக்காடு உயர்ந்து 13.86 கோடியாக உயரும் என்று இது குறித்து ஆய்வு செய்துள்ள கார்ட்னர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்ற மொத்த செல்பேசிகளின் எண்ணிக்கை 11.7 கோடியாகும். இந்த நிலை தொடர்ந்து அதிகரித்து 2014ஆம் ஆண்டில் 20.6 கோடியாக செல்பேசி விற்பனை அதிகரிக்கும் என்று கார்ட்னர் கூறியுள்ளது.

இந்திய சந்தையில் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியவை நோக்கியா, மோட்டரோலா, ரிலையன்ஸ், வோடாபோன் ஆகியன, ஆனால் இப்போது குறைந்த விலை உள்ளுர் தயாரிப்புகளும், சீன தயாரிப்புகளும் மேற்கண்ட நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளித்து வருகின்றன என்று கார்ட்னர் ஆய்வு நிறுவனத்தின் முதன்மை பகுப்பாய்வாளர் அன்சுல் குப்தா கூறியுள்ளார்.

தற்போது இந்திய சந்தையில் 50க்கும் மேற்பட்ட செல்பேசி நிறுவனங்களின் தயாரிப்புகள் விற்பனை ஆகி வருவதாக கார்ட்னர் தெரிவித்துள்ளது.

3ஜி என்றழைக்கப்டும் மூன்றாவது தலைமுறை செல்பேசிகள் இந்தியாவில் அறிமுகமாகியிருந்தாலும், அவைகளின் விற்பனைப் பங்கு 2010ஆம் ஆண்டில் 16.7 விழுக்காடாக மட்டுமே இருக்கும் என்றும், எதிர்காலத்தில் 3ஜி செல்பேசிகளின் விற்பனை மொத்த எண்ணிக்கையில் 69 விழுக்காடு அளவிற்கு உயரும் என்றும் கூறியுள்ள கார்ட்னர், ஸ்மார்ட் போன்களில் விற்பனை தற்போது 5.2 விழுக்காடாக உள்ளது, இது 2014இல் 18 விழுக்காடாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக