செவ்வாய், 27 ஜூலை, 2010
இளைஞர்கள் தற்கொலை எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகம்!
உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகம் என்று ஊடகவியாளருக்கான மனநல விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டின் மொத்த எண்ணிக்கையில் சென்னை 3ஆம் இடத்தில் இருப்பதாகவும், இங்கு தற்கொலை செய்துகொள்வோரின் விகிதம் 11 விழுக்காடு எனவும் மனநல மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஊடகவியாளருக்கான மனநல விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று சென்னையில் நடைபெற்றது. மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகமும், மனச்சிதைவு நோய் ஆராய்ச்சி நிறுவனமும் (ஸ்கார்ஃப்) இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மனநல மருத்துவரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான டாக்டர் சாரதா மேனன் சிறப்புரையாற்றினார்.
மனநலம் குறித்த சரியான புரிதலுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற கேட்டுக்கொண்ட அவர், பொது மக்களிடம் மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்ற இயலும் என்று தெரிவித்தார். மனச்சிதைவு உள்ளிட்ட மனநோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று கூறிய டாக்டர் சாரதா மூட நம்பிக்கைகளை கைவிட்டு அறிவியல் பூர்வமாக இதனை அணுக வேண்டும் என்று கூறினார்.
உரிய மருத்துவரின் ஆலோசனைகளுடன் சரியான மருந்துகளை உட்கொண்டால் மனநலம் பாதித்தவர்களை குணப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களை திரைப்படங்கள் சரியான கோணத்தில் சித்தரிக்க வேண்டும், ஆக்கபூர்வமாக அணுக வேண்டும் என்றும் டாக்டர் சாரதா தெரிவித்தார்.
கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய அபிராமி ராமநாதன், மனச்சிதைவு நோயால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்புகளை நேரடியாக பார்த்த அனுபவம் தனக்கு உண்டு என்றும் சரியான மருத்துவ சிகிச்சையும், குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் மனநோயாளிகளுக்கு தேவை என்றும் எடுத்துரைத்தார்.
கருத்தரங்கில் உரையாற்றிய பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் க.மா.ரவீந்திரன், இன்றைய அவசர உலகில் மக்களை பெரிதும் பாதிப்பது மன அழுத்தமும், அதன் விளைவுகளும் தான் என்று கூறினார். மனநலம் தொடர்பான விழிப்புணர்வு செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஸ்கார்ப் அமைப்பு வருடம் தோறும் "ஃப்ரேம் ஆஃப் மைன்ட்" என்ற மனநலம் தொடர்பான விழிப்புணர்வு திரைப்பட விழாவை நடத்தி வருவதாகவும், ஐந்து நிமிடங்களுக்குள் மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதாகவும் இந்த அமைப்பின் இயக்குனர் டாக்டர் தாரா தெரிவித்தார். 'மனநல குறைபாடு மற்றும் நோய்களை தீர்ப்பதில் குடும்பத்தின் பங்கு' என்பது இந்த ஆண்டு குறும்பட போட்டிக்கான தலைப்பு. போட்டிக்கான குறும்படங்களை இந்த ஆண்டு திரைப்பட விழாவிற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.
மன அழுத்தமும், தற்கொலையும் என்ற தலைப்பில் சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் இயக்குனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார், சிறுவர் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் மனநலம் என்ற தலைப்பில் குழந்தைகள் நல மருத்துவமனையின் மனநலத்துறை தலைவர் டாக்டர் ஜெயந்தினி, மனச்சிதைவு நோய், மனநலம் மற்றும் ஊடகங்கள் என்ற தலைப்பில் ஸ்கார்ப் அமைப்பைச் சார்ந்த டாக்டர் மங்களா ஆகியோர் உரையாற்றினர். பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக