செவ்வாய், 6 ஜூலை, 2010

புதிதாக 2,653 ‌வி.ஏ.ஓ.‌க்க‌ள் நியமனம்: 25ஆ‌ம் தேதி அறிவிப்பு வெளி‌யீடு!

தமிழக அரசின் வருவாய் துறையில் புதிதாக 2,653 கிராம நிர்வாக அதிகாரிகள் (V.A.O) நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வரு‌ம் 25ஆ‌ம் தேதி வெளியாகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு 2,500 கிராம நிர்வாக அதிகாரிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (T.N.P.S.C) போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் 900 பேர் பெண்கள். வி.ஏ.ஓ. தேர்வு பதவிக்கு 10ஆ‌ம் வகு‌ப்பு படிப்பு அடிப்படை கல்வித்தகுதி என்ற போதிலும் கடந்த முறை பட்டதாரிகளும், முதுநிலை பட்டதாரிகளும்தான் அதிக எண்ணிக்கையில் தேர்வில் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் அந்த தேர்வை எழுதினார்கள்.

இந்த நிலையில், காலி இடங்கள் அதிகமாக இருப்பதால், மேலும் 2,500 கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. சாதி சான்றிதழ், இருப்பிடச்சான்று, வருமானச்சான்றிதழ், பட்டா, சால்வன்சி சான்றிதழ் என மக்களின் அன்றாட வாழ்க்கையோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட பதவியாக இது இருப்பதால் காலி இடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

வி.ஏ.ஓ. தேர்வு பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று வேலையில்லாத இளைஞர்கள், இளம்பெண்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில், 2,653 காலி இடங்களை நிரப்ப பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் வழங்கியது. காலி இடங்கள் பட்டியலும் டி.என்.பி.எஸ்.சி.யிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 2,653 வி.ஏ.ஓ. பணி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது. மொத்த காலி இடங்களில் 1,576 இடங்கள் பொது காலி இடங்கள் ஆகும். எஞ்சியுள்ள 1027 காலி இடங்கள் எஸ்.சி., எஸ்.டி மற்றும் அருந்ததியர்களுக்கான சிறப்பு காலி இடங்கள் ஆகும்.

கடந்த வி.ஏ.ஓ. தேர்வை 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தற்போது இந்த ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று டி.என்.பி.எஸ்.சி. எதிர்பார்க்கிறது.

எனவே, இந்த வி.ஏ.ஓ. தேர்வுக்காக 12 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அவற்றை தபால் அலுவலகங்களில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வி.ஏ.ஓ. தேர்வு அறிவிப்பை தொடர்ந்து, 650 உதவி பொ‌றியாள‌ர்க‌ள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. உதவி பொ‌றியாள‌ர் காலி இடங்கள் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறையில் ஆகியவற்றில் நிரப்பப்பட இருக்கின்றன. காலி இடங்களில் சிவில், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவுகளில்தான் அதிக இடங்கள் உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக