சனி, 10 ஜூலை, 2010
பாம்பே டையிங் பாலியஸ்டர் தொழிற்சாலையை வாங்கும் ரிலையன்ஸ்!
மும்பை: முப்பது ஆண்டுகளுக்கு முன் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் [^] அம்பானிக்கும் பாம்பே டையிங் அதிபர் நுஸ்லி வாடியாவுக்கும் இடையே நடந்த மோதல் உலகப் பிரசித்தம்.
அதன் பின்னர் ரிலையன்ஸ் அசுர வேகத்தில் வளர்ந்து வாடியாவின் ஒட்டுமொத்த நிறுவனங்களை விட பல மடங்கு பெரிய நிறுவனமாகிவிட்டது. இந் நிலையில் இப்போது வாடியாவுக்குச் சொந்தமான பாம்பே டையிங் நிறுவனத்தி்ன் பாலியஸ்டர் தொழிற்சாலையை வாங்க முகேஷ் அம்பானி பேச்சு நடத்தி வருகிறார்.
இரு தரப்பும் விட்டுத் தந்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த 'டீலை' முடித்தால், 30 வருட கால வாடியா-ரிலையன்ஸ் மோதல் முடிவுக்கு வரலாம் என்கிறார்கள் தொழில்துறை நிபுணர்கள்.
பெட்ரோகெமிக்கல் துறையில் வாடியாக்களை வென்றுவிட்ட அம்பானி, பாலியஸ்டர்-ரேயான் உற்பத்தியிலும் வாடியா நிறுவனத்தை எப்போதோ பின்னுக்குத் தள்ளிவிட்டார்.
வாடியாக்கள் நடத்தி வரும் இந்த பாலியஸ்டர் ஆலை நீண்டகாலமாகவே நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது. இதை வாங்க இண்டோ ராமா, ஜேபிஎப் ஆகிய நிறுவனங்கள் போட்டியிட்டு வரும் நிலையில், முகேஷ் அம்பானியும் கோதாவில் குதித்து வாடியாக்களுடன் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார்.
இந்த நிறுவனம் தொடர்பாகத்தான் நுஸ்லி வாடியாவும் தீருபாய் அம்பானியும் 1980களில் கடும் மோதலி்ல் ஈடுபட்டனர் என்பது நினைவுகூறத்தக்கது.
வாடியாக்கள் இப்போது ரியல் எஸ்டேட் துறையில் வெற்றிக் கொடி நாட்டியுள்ள நிலையில், வருடத்துக்கு 1,65,000 டன் பாலியஸ்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையை விற்றுவிட்டு, அந்த நிதியையும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த ஆலை ரு. 300 கோடி வரை விலை போகும் என்கிறார்கள்.
பெட்ரோகெமிகல்ஸ் மற்றும் பாலியஸ்டர் தொழிற்சாலைகளால் கடந்த ஆண்டில் வாடியாக்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.100 கோடி. அதே நேரத்தில் அவர்களது ரியல் எஸ்டேட் பிரிவு ரூ. 350 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
பாம்பே டையிங் ஆலையை ரிலையன்ஸ் வாங்கினால் அவர்களது பாலியஸ்டர் தயாரிப்பு 9 லட்சம் டன்னைத் தாண்டிவிடும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக