வியாழன், 15 ஜூலை, 2010

புனே: ஊழியர்களை இழுப்பதை நிறுத்திக் கொண்ட ஐடி நிறுவனங்கள்!


புனே: விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், காக்னிசன்ட் ஆகியவை பரஸ்பரம் பணியாளர்களை தங்கள் நிறுவனத்துக்கு இழுப்பதை நிறுத்திக் கொண்டுள்ளன. புனே நகரில் உள்ள இந்த நிறுவனங்களின் கிளைகள் இது தொடர்பாக தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இதன்படி ஒரு நிறுவனத்தில் 'நோட்டீஸ் பிரீயடை' நிறைவு செய்யாத எந்த ஊழியரையும் இன்னொரு நிறுவனம் சேர்த்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளன.

புனே ஹின்ஜேவாடி சாப்ட்வேர் பார்க்கி்ல் விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், காக்னிசன்ட் உள்ளிட்ட 28 முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களின் கிளைகள் உள்ளன.

இங்கு ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனம் பணியாளர்களை இழுப்பது வழக்கம். தங்கள் ப்ராஜக்டுகளை விரைவில் முடிக்க ஏதுவாக, இந்த ஊழியர்களிடம் 'ரிலீவிங் ஆர்டர்' கூட இல்லாமல் பணியில் சேர்க்க ஆரம்பித்தன. இதனால் நோட்டீஸ் பிரீயடைக் கூட நிறைவு செய்யாமல் ஊழியர்கள் நிறுவனம் விட்டு நிறுவனம் தாவ ஆரம்பித்தனர்.

இந்த நோடீஸ் பிரீயடுக்காக பழைய நிறுவனத்தில் அந்த ஊழியர் செலுத்த வேண்டிய பணத்தை புதிதாக சேர்க்கும் நிறுவனம் 'ஜாயினிங் போனஸ்' என்ற பெயரில் வழங்கி வந்தது.

இதனால் இந்த நிறுவனங்களில் அடிக்கடி பணியாளர்கள் விலகலும், இதனால் ப்ராஜக்டுகள் தாமதமாவதும் வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக எல்லா நிறுவனங்களுக்குமே பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து பரஸ்பரம் ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனம் பணியாளர்களை வேலைக்குச் சேர்ப்பதை கைவிடுவது என இந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக கடந்த மாதம் இன்போஸிஸ் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் 28 நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அப்போது திறமையான பணியாளர்களை ஒரு நிறுவனத்தில் இருந்து இழுப்பதை தவிர்க்க முடியாது என்றே பெரும்பாலான நிறுவனங்கள் முதலில் கருத்துத் தெரிவித்தன. ஆனால், எல்லோருக்குமே பாதிப்பு ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு ஊழியர்களை சேர்க்க சில புதிய விதிகளை இந்த நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.

அதன்படி ஒரு நிறுவனத்தில் நோட்டீஸ் பிரீயடை நிறைவு செய்யாமல் பாதியிலேயே திடீரென விட்டுவிட்டு வரும் எந்த ஊழியரையும் அடுத்த நிறுவனம் சேர்ப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புனே நகரில் இந்த 28 நிறுவனங்களில் மட்டும் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவை ஆண்டு்க்கு ரூ. 19,000 கோடி அளவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்களில் பணியாளர்கள் விலகல் விகிதம் 17% ஆக உள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ. 850 கோடி வரை இந்த நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

புனேயில் இந்த நிறுவனங்கள் செய்து கொண்டுள்ள இந்த 'அமைதி ஒப்பந்தம்' வெற்றி பெற்றால், நாடு முழுவதும் மேலும் பல பகுதிகளிலும் இது அமலாகலாம்.

நாடு முழுவதும் இன்போஸிஸ் நிறுவனத்தில் இருந்து மட்டும் கடந்த காலாண்டில் மட்டும் 16 சதவீத ஊழியர்கள் விலகியுள்ளனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக