ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

100 ஆண்டு பழமை வாய்ந்த ஆங்கிலேயர் ஆட்சிகால ஆர்ச் இடிப்பு!


தென்காசி: தென்காசதியில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 100 ஆண்டு பழமை வாய்ந்த வரவேற்பு வளைவு இடிக்கப்பட்டது.

தென்காசி வட்டார பொதுமக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கு மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஒப்புதல் வழங்கி ரூ.30 கோடி செலவில் தென்காசி-மதுரை சாலையில் மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த 1901-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்து அரசியாக எலிசபெத் ராணி பதவி ஏற்றதை கொண்டாடும் வகையில் ஆங்கிலேய அரசு தென்காசியின் நுழைவுப் பகுதியில் ஒரு வரவேற்பு வளைவினை அமைத்தது.

நகருக்குள் வரும் பயணிகளை வரவேற்கும் வண்ணம் அமைக்கப்பட்ட இந்த வளைவு, மேம்பால பணிகளுக்கு தடையாக இருந்து வந்ததாகக் கூறப்பட்டது. எனவே, நேற்று இந்த வளைவு நகராட்சி அதிகாரிகள் அனுமதியோடு இராட்சத இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

ஆங்கிலேயர் ஆண்டதற்கு சான்றாக இருந்த வரவேற்பு வளைவு அகற்றப்பட்டதை பார்த்த பல பேர் வேதனை தெரிவித்தனர். இப்பணி முடிந்தபின் இது போன்று ஒரு வளைவு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக