வியாழன், 30 செப்டம்பர், 2010
மோசடி மோட்டல்கள்!
சீட்டு பணம் நடத்தியும்... வேலை வாங்கித் தருவதாகவும் கூறி செய்வது ஒருவகையான மோசடி என்றால், ஓட்டல்களிலும், பொதுக் கழிப்பறைகளிலும் மாண்புமிகுக்களின் ஆசியோடு நடந்தேறி வருகிறது வேறு வகையான மோசடிகள்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தமிழக அரசு விரைவு பேருந்துகளில் ஒருநாளைக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர்.இந்த பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் சாப்பிடுவதற்கு, பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்திலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவிலேயே, நெடுஞ்சாலையில் தனியாக இருக்கும் மோட்டல்களில் பேருந்துகளை நிறுத்தி விடுகிறார்கள்.
அங்கு சாப்பிட போகும் மக்களுக்கோ அதிர்ச்சி. ஒரு தோசை 30 ரூபாய், சரி இட்லியை கொடுங்கள் என்று கேட்டால் ஒன்று பத்து ரூபாய். சரி இதுவும் வேண்டாம் புரோட்டா கொடுங்கள் என்றால் அதன் விலையோ 20 ரூபாய். வேறு என்ன செய்வது பசிக்கு சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நினைப்பில் இந்த தொகைக்கு கொடுத்து படுமோசமான சாப்பாடுகளை மக்கள் சபித்துக் கொண்டேதான் சாப்பிட்டு செல்கிறார்கள்.
இப்படி இந்த மோட்டல்களில் நடந்து கொண்டிருப்பது ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தெரியும்.பின்னர் ஏன் அந்த மோட்டல்களில் பேருந்துகளை நிறுத்துகிறார்கள் என்று கேட்கும் மக்களிடம், மறைமுக (வாய்மொழி) மேலிட உத்தரவினால்தான் நிறுத்தப்படுகிறது என்கிறார்.
விழுப்புரம் அருகே மோட்டல்கள் நிறுத்தபடுவதற்கு அம்மாவட்ட மாண்புமிகுவை கைகாட்டுகிறார்களாம் போக்குவரத்து துறை அதிகாரிகள்! இதில் கொடுமை என்னவென்றால் சாலைகளில் உள்ள அந்த மோட்டல்களில் இரண்டு அரசு அதிகாரிகள் எப்போதும் நின்று கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள்தான் அரசு பேருந்துகளை சம்பந்தப்பட்ட மோட்டல்களுக்கு அனுப்பி வைக்கின்றனராம்.அப்படி அந்த மோட்டல்களுக்கு செல்லாத பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
திருச்சிபக்கமும் இதே நிலைதான் நீடித்து வருவதாக கூறுகிறா அண்மையில் திருச்சியிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவர்! ” திருச்சியிலிருந்து அரசு பேருந்தில் அதிகாலை 5 மணிக்கு புறப்படுகிறேன். 8 மணிக்கு சாப்பிட வேண்டும் என்று ஓட்டுநரிடம் கேட்டபோது, ஒரு குறிப்பிட்ட ஊரைச் சொல்லி அதைத் தாண்டி அந்த குறிப்பிட்ட விடுதியில்தான் நிறுத்த முடியும் என்றார்.ஏன் என்று கேட்டதற்கு, அது ஒரு மாண்புமிகுவின் சகோதரரின் விடுதி என்றும் அங்குதான் நிறுத்த வேண்டும் என்று எழுத்தப்படாத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஓட்டுநர் தெரிவித்துள்ளார். மீறி நிறுத்தாமல் சென்றால் ஓட்டுநரும், நடத்துனரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவோம் என்றும் அந்த ஓட்டுநர் தெரிவித்தாக அந்த பயணி கூறினார்.
கன்னியாகுமரி மற்றும் நெல்லை பக்கமிருந்து வருபவர்களுக்கும் இதே அனுபவம்தான்! கயத்தார், விருதுநகர், சாத்தூர் மற்றும் மதுரை பேருந்து நிலையங்களில் பேருந்து நிற்காது! அதற்கு சில கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருக்கும் இத்தகைய மோட்டல்களில்தான் நிற்கும்.
இது ஒரு வகையான மோசடி என்றால்..., பேருந்து நிலையங்கள் மற்றும் மேற்கூறிய மோட்டல்கள் அமைந்திருக்கும் கட்டண கழிப்பறைகளில் நடைபெறும் மோசடி, அந்த இடத்தைப்போலவே முக சுளிக்க வைக்கிறது!
சென்னை, கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு பல்வேறு முக்கிய இடங்களில் கழிப்பிடம் கட்டியுள்ளது. இந்த கழிப்பிடத்தை சம்பந்தப்பட்ட மாநகராட்சி தனியாருக்கு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடுகிறது. அதோடு சரி இதில் என்ன நடக்கிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதே கிடையாது.
அந்த கழிப்பிடத்தில் சீறுநீர் கழிக்க முதலில் ஒரு ரூபாய் வசூலிக்கப்பட்டது. இது படிப்படியாக 2 ரூபாய் ஆனது. தற்போது 3 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. மலம் கழிக்க ரூபாய் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குமுறுகின்றனர். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் அதிகார தோரணையில் அவர்கள் பேசும் ஆபாச பேச்சுக்களை காதுகொடுத்து கேட்க முடியாது என்று கூறுகின்றனர் பொதுமக்கள்!
உதாரணத்திற்கு நெல்லை இரயில் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிப்பிடத்தில் அண்மையில் கண்கூடாக காண முடிந்தது இத்தகைய கட்டணக் கொள்ளையை!
அவசரமாக சிறு நீர் கழிக்க வந்தவரிடம், 3 ரூபாயை வைத்துவிட்டு உள்ளே போ என்றார் அங்கிருந்த குத்தகைதாரர்!
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் தொடங்கிவிட்ட நிலையில், சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கும்.இந்நிலையில் இத்தகைய கொள்ளைகளுக்கு அரசு முடிவு கட்டினால் நல்லது!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக