வியாழன், 23 செப்டம்பர், 2010

கேப்டனால் டைட்டானிக் விபத்து!


டைட்டானிக் கப்பல் விபத்துக்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது அக்கப்பல் கேப்டன் முட்டாள்தனமாக கப்பலை செலுத்தியதே விபத்துக்கு காரணம் என்ற புதுத் தகவல் ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் "டைட்டானிக்" என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியான பிறகே உலகில் பலருக்கு, டைட்டானிக் என்ற ஒரு ஆடம்பர மற்றும் பிரமாண்டமான கப்பல் தயாரிக்கப்பட்டதும், அந்த கப்பலின் முதல் பயணமே விபத்தில் முடிந்ததும் பற்றிய தகவலே தெரிந்தது.

1912 ல் இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் ஹாம்ஷிர் என்ற நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரான சவுதாம்ப்டனிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு பயணித்த டைட்டானிக் கப்பல், வேகமாக சென்றதாலும், எதிரே பனிப்பாறையை அக்கப்பல் கேப்டன் கவனித்து சுதாரிப்பதற்குள் அதில் மோதியதாலும் உடைந்து மூழ்கியதாகவே இதுநாள் வரை ஆண்டாண்டு காலமாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்து ஏறக்குறைய 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், விபத்துக்கு அந்த கப்பல் கேப்டன் முட்டாள்தனமாக செலுத்தியதே காரணம் என்று புதுத் தகவலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது லண்டனில் வெளியாகி உள்ள " குட் அஸ் கோல்ட்" ( Good as Gold ) என்ற புத்தகம்!

"கப்பல் பனிப்பாறையில் மோதிவிடாமால் தவிர்க்க நிறைய நேர அவகாசம் இருந்தது. ஆனால் கேப்டன் பீதியடைந்து பதற்றத்திலும், அவசரத்திலும் தவறான பாதையில் கப்பலை செலுத்தியதே விபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது.

அந்த நேரத்தில் அந்த தவறு நிகழாமல் சரி செய்திருக்கலாம். ஆனால் விபத்தை தவிர்ப்பதற்கு கேப்டன் சுதாரிப்பதற்குள் காலம்கடந்து, பனிப்பாறையில் மோதியதால் அந்த மாபெரும் டைட்டானிக் கப்பலில் ஓட்டை விழுந்து, கடல் தண்ணீர் உள்ளே புகுந்து நடக்கக்கூடாததெல்லாம் நடந்துவிட்டது.

மேலும் பனிப்பாறையில் மோதி கப்பலில் ஓட்டை ஏற்பட்டபோதிலும், கப்பலை தொடர்ந்து செலுத்தாமல், அப்படியே நிறுத்தி வைத்திருந்தால் கூட அதில் பயணித்த பயணிகளையும், கப்பல் சிப்பந்திகளையும் காப்பற்றியிருக்கலாம். ஆனால் கப்பலை நிறுத்துவதற்கு பதிலாக, தொடர்ந்து செலுத்த முயற்சித்ததால், கப்பலின் உடைந்த பகுதி வழியாக கடல் நீர் உள்ளே புகுந்து விட்டதாக" கூறி நமது அதிர்ச்சி டெசிபல்- ஐ கூட்டுகிறது அப்புத்தகம்!

இதுநாள் வரை இப்படி ஒரு தவறு நிகழ்ந்தது தெரிய வராமல் இருந்த நிலையில், அந்த கப்பல் விபத்தில் தப்பி பிழைத்த சார்லஸ் லைட்டாலர் என்ற மூத்த அதிகாரி ஒருவர், தனது குடும்பத்தினரிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

சரி... இதனை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்த சார்லஸ், டைட்டானிக் கப்பல் விபத்து தொடர்பாக நடந்த இரண்டு கட்ட விசாரணைகளில் ஆஜரானபோது ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டால், தனது மற்றும் தனது சக பணியாளர்களின் வேலை பறிபோய்விடுமே என்ற பயம் காரணமாகவே விசாரணைக் குழுவிடம் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக கூறுகின்றார் சார்லஸின் பேத்தியும், மேற்கூறிய புத்தகத்தை எழுதியிருப்பவருமான லூஸி பேட்டன்!

கப்பல் கேப்டன் அந்த முட்டாள்தனத்தை செய்யாமல் இருந்திருந்தால் , பனிப்பாறையில் கப்பல் மோதாமல் எளிதில் தவிர்த்திருக்கலாம்.

இரண்டு மைல் தொலைவில் இருக்கும்போதே பனிப்பாறையை கப்பலின் முதல் நிலை அதிகாரி வில்லியம் முர்டோச் பார்த்துவிட்டார். உடனடியாக அவர் இது குறித்து கப்பலை ஓட்டிக்கொண்டிருந்த ராபர்ட் ஹிட்ச்சின்ஸ்க்கு தகவல் தெரிவித்தார்.

உடனே பதற்றமடைந்த ராபர்ட் கப்பலை இடதுபுறமாக திருப்புவதற்குப் பதிலாக,வலது புறமாக திருப்பினார். உடனே நடந்துவிட்ட தவறை உணர்ந்த வில்லியம், கப்பலை சரியான பாதையில் செலுத்துமாறு அப்போதுகூட எச்சரித்தார். அதனைக் கேட்டு ராபர்ட் சுதாரிப்பதற்குள் கப்பல் பனிப்பாறையில் மோதியேவிட்டது.

கப்பல் உடைந்து உள்ளே தண்ணீர் புக தொடங்கியும் கூட, கப்பலை நிறுத்தாமல் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு கப்பலை செலுத்தியுள்ளார் கேப்டன். இதனால்தான் கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டது.

கூடவே டைட்டானிக் கப்பலின் உரிமையாளர் புரூஸ் இஸ்மேவும், தனது கப்பல் கம்பெனியின் பெயர் கெட்டுவிடுமே... லட்சக்கணக்கான டாலர்களை கொட்டி உருவாக்கிய தனது கப்பல் முதலீடு போய்விடுமே என்று பயந்து, கப்பலை தொடர்ந்து ஓட்டிச் செல்லுமாறு கேப்டனுக்கு உத்தரவிட்டுள்ளார்.கப்பல் மூழ்கியதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

" கப்பலை தொடர்ந்து செலுத்தாமல் அப்படியே நிறுத்தியிருந்தால், கப்பல் தொடர்ந்து மிதந்தபடியே நின்றிருக்கும்; நான்கு மணி நேர பயண தொலைவிலேயே வந்து கொண்டிருந்த மற்றொரு கப்பலிலிருந்து உதவி கிடைத்திருக்கும்" என்றும் தனது தாத்தா ஆதங்கப்பட்டதாக அப்புத்தகத்தில் கூறியிருக்கிறார் லூஸி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக