வியாழன், 30 செப்டம்பர், 2010

வெப்ப சக்தியில் கணினிகள் இயங்க முடியும் - ஆய்வு!


கணினியிலிருந்து வெளியாகி விரயமாகிச் செல்லும் வெப்பத்தைக் கொண்டே கண்னியை இயக்க வைக்கும் அதிசய தொழில்நுட்ப ஆய்வுமுறையை ஓஹியோ பல்கலைக் கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.

அதாவது காலியம் மாங்கனீஸ் ஆர்சினைட் என்ற செமி-கண்டக்டர் மூலம் வெப்பத்தை மின்சக்தியாக மாற்றும் முறையை இந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.

வெப்ப சக்தியை இந்த செமி கண்டக்டர் மின்சக்தியாக மாற்றும் 'ஸ்பின்' என்ற நிகழ்வு இந்த செமி-கண்டக்டரில் நிகழ்ந்துள்ளதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த முறை முழுமை அடையும்போது ஒருங்கிணைந்த மின்சுற்றுப்பாதைகள் வெப்பத்திலேயே இயங்க முடியும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

அனல் மின்சக்தி, மற்றும் இவர்கள் கண்டுபிடித்துள்ள 'ஸ்பின்ட்ரானிக்ஸ்' என்ற இரண்டையும் இந்த ஆய்வு இணைத்துள்ளதாக நேனோ தொழில்நுட்ப நிபுணரான ஓஹியோ பல்கலை. கல்விப்புல ஆய்வாளர் ஜோசப் ஹெரிமான்ஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்பின்ட்ரானிக்ஸை, தெர்மோ எலெக்ட்ரானிக்ஸுடன் பிணைக்கும் வேலையை இந்த ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். இந்த முறையில் வெப்பசக்தி மின்சக்தியாக மாற்றமடையும்.

இந்த தெர்மோ-ஸ்பின்ட்ரானிக்ஸின் மற்றொரு சாத்தியமாகக் கூடிய பயன் என்னவெனில் மரபான மைக்ரோ புரோசசரின் மேல் வைக்கப்படும் ஒரு உபகரணம் விரயமாகும் வெப்பத்தை உறிஞ்சி வெளியேற்றும் இதனால் கூடுதல் மெமரியும், கணினி இயக்கமும் சாத்தியமாகும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

விரயமாகும் வெப்பத்தை மின்சக்தியாக மாற்றும் காலியம் மாங்கனீஸ் ஆர்சினைட் என்ற இந்தப் பொருளை அவர்கள் ஒருபக்கம் வெப்பமேற்றி பரிசோதனை செய்தனர். மறுபுறம் வெப்பமற்ற பகுதி. இதில் வெப்பமேற்றப்பட்ட பகுதியில் எலெக்ட்ரான்கள் ஸ்பின்-அப் பகுதி என்ற மின்சக்தியாக மாறும் திசை நோக்கி தாமாகவே செல்வதைக் கண்டுள்ளனர்.

இந்த ஆய்வில் அவர்களுக்கு கிடைத்துள்ள மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இந்த செமிகண்டக்டர் பொருளை எதனுடனும் இணைக்கவோ, பொருத்தவோ அல்லது தொடுமாறோ வைக்க வேண்டியதில்லை என்பது. தொடர்பில்லாமலேயே விளைவுகள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு செல்வதையும் இவர்கள் கண்டுள்ளனர்.

இந்த ஆய்வுகள் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது, மேலும் இது வளர்ச்சியடைந்து முழுமை அடைய மேலும் சில பரிசோதனைகள் தேவைப்படலாம் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக