வெள்ளி, 17 செப்டம்பர், 2010

திருட்டுப் பள்ளிகளும் திருந்தாத பெற்றோர்களும்!


சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி அது. கல்விக் கட்டணம் வழக்கம் போல எக்கச்சக்கம். அட்மிஷன் கிடைப்பது குதிரைக் கொம்பு. எம்பி, அமைச்சர், பெருந்தொழிலதிபர் சிபாரிசெல்லாம் இருந்து, பெருந்தொகையும் செலுத்தினால் அட்மிஷன் கிடைக்கும்.

கல்வி என்ற பெயரில் பகிரங்கமாகக் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை அமைத்து தமிழக அரசு புதிய கல்விக் கட்டணங்களை அறிவித்தது.

அவ்வளவுதான்… இந்தப் பள்ளி நிர்வாகம் பேயாட்டம் போட ஆரம்பித்தது. இத்தனை நாள் வருடத்துக்கு ஒரு முறை குறிப்பிட்ட பெருந்தொகையைப் பெற்றுக் கொள்வார்கள். மாதாமாதம் வழக்கம் போல கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரைத்த கட்டணத்தை தமிழக அரசு அரசு ஆணையாக வெளியிட்ட பிறகு, பெற்றோர்களை அழைத்தது அப்பள்ளி. கட்டணத்தை இருமடங்கு உயர்த்தியிருப்பதாகவும், இது விஷயமாக யாருக்காவது ஆட்சேபணை இருந்தால் அவர்கள் பிள்ளைகளை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறிவிட்டது.

வாயை பலமாக பொத்திக் கொண்ட பெற்றோர், அப்போதே பள்ளி நிர்வாகம் கேட்ட தொகைக்கு செக்கை கிழித்துக் கொடுத்துவிட்டுத் திரும்பினர். இத்தனை காலமும் வருடத்துக்கு ஒரு முறை பெருந்தொகையை கட்டணமாகப் பெற்ற நிர்வாகம், இப்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதே அளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூற, அதற்கும் மறுபேச்சின்றி கட்டிவிட்டு வந்தனர் பெற்றோர்.

தமிழகம் முழுக்க உள்ள தனியார் பள்ளிகளில் இன்று 60 சதவீதப் பள்ளிகளில் இதுதான் நிலைமை. சென்னையை விடுங்கள்.,.. சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் அந்த விகாஸ், இந்த விகாஸ் என்ற பெயரில் பள்ளிக் கடை திறந்து கல்வி வியாபாரம் செய்யும் பெருமுதலைகள் வாங்கும் கல்விக் கட்டணம் பல லட்சங்களைத் தாண்டுகிறது.

6-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கு 3 லட்சம் ஆண்டுக் கட்டணமும், ரூ 60 ஆயிரம் மதிப்புக்கு சீருடை, புத்தகம் மற்றும் நோட்டுகள் வாங்க வேண்டும் என்றும் கரூரைச் சேர்ந்த ஒரு பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பியிருந்ததை என்னவென்பது!

தனியார் பள்ளிகளுக்கு நாம் முன் வைப்பது ஒரேயொரு கருத்தைத்தான்… குறைந்த செலவில் கல்வி வசதியை அளிக்க துப்பில்லாத நீங்கள் எதற்காக கல்வி நிறுவனங்களை அறக்கட்டளைகளின் பெயர்களில் நடத்த வேண்டும்? ஏதோ ஒரு மன்னார் அண்ட் கம்பெனி என்று போர்டு மாட்டிக் கொண்டு வியாபாரத்தை தொடரலாமே… அரசுக்கு நியாயமாக செலுத்த வேண்டிய வரிகள் உள்ளிட்டவற்றைச் செலுத்தலாமே… எதற்கு சலுகைகள் கோருகிறீர்கள்?

கல்வியை சேவையாக செய்ய வக்கில்லாத நீங்கள், எதற்காக அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்க வேண்டும்? கல்வி என்பது அரசு மற்றும் தனியார் இணைந்து பணியாற்றவேண்டிய துறை. இதில் வியாபார நோக்கம் இருக்கக் கூடாது என்கிறது இந்திய அரசியல் சாசன சட்டம். இதற்கு முரணாக, பெரும் பணத்தைக் கறப்பதிலேயே குறியாக இருக்கும் உங்களுக்கு கல்வித் துறையில் என்ன வேலை?

அரசுகள் மக்கள் நலன் கருதி கொண்டு வரும் முக்கிய திருத்தங்களைக் கூட நிறைவேற்ற சிணுங்கும் தனியார் பள்ளிகளை இழுத்து மூடுவதுதான் இன்று நாட்டின் தலையாய பணி. பல தலைமுறைகள் காப்பாற்றப்பட இது வழி வகுக்கும்.

அடுத்த குற்றவாளிகள் பெற்றோர்கள்…

அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்? என்று மட்டும் யாரும் கேட்டுவிடாதீர்கள்.

அதிக பணம் கேட்கும் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால்தான் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள் என்ற கருத்து கிட்டத்தட்ட ஒரு மூட நம்பிக்கையாகவே மாறி வருகிறது.

இதை நன்கு புரிந்து வைத்துள்ள தனியார் பள்ளிகள், முடிந்த வரை பணம் கறப்பதிலேயே குறியாக உள்ளன.

தங்களை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என்ற திமிர்த்தனத்தில், மாணவர் – பெற்றோர் நலன் கருதி அரசு பிறப்பிக்கும் சட்டங்களுக்கே சவால் விடுகின்றன இந்தப் பள்ளிகள். மக்களிடம் கொள்ளை பணம் பிடுங்க வேண்டும். அதே நேரம் மக்கள் வரிப்பணத்தில் அரசு தரும் அத்தனை சலுகைகளையும் கல்வி சேவை என்ற பெயரில் அனுபவிக்கவும் வேண்டும். இதுதான் தனியார் பள்ளிகளின் அல்டிமேட் நோக்கம்.

இதற்கு தெரிந்தே துணை போகிறார்கள் பெற்றோர்கள். கொள்ளைக்காரனுக்கு எதிரே பணப்பெட்டியைத் திறந்து வைத்து, ‘வா வா வந்து எடுத்துக்கோ…’ என்று கூவாத குறைதான் இவர்கள் மனநிலை. இது புரிந்திருப்பதால்தான் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் புதிய கல்விக் கட்டண அமலாக்கத்துக்கு தடை வாங்கும் அளவுக்கு போயிருக்கிறார்கள் பள்ளி உரிமையாளர்கள்.

நியாயமாக, திருடனை விட, தெரிந்தே அவனுக்கு தி்ருட்டுக் கொடுக்கும் அடி முட்டாளைத்தான் அதிகம் தண்டிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இந்த சூழ்நிலையிலாவது அரசுப் பள்ளிகளின் பக்கம் பெற்றோர் கவனம் திரும்புமா? தனியார் பள்ளிகளை முற்றாக ஒதுக்கித் தள்ளும் முடிவுக்கு மக்கள் வருவார்களா? என்று சிலர் கேட்கிறார்கள்.

ம்ஹூம்… எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த ஆட்டு மந்தை திருந்தி சிந்தனைப் பாதைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை அறவே இல்லை!

என்னைப் பொறுத்தவரை, கல்வித் துறையின் நோய்கள் இந்த கல்வி வியாபாரிகள் மட்டுமல்ல, கண்மூடித்தனமான பெற்றோர்களும்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக