2001ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தனி மெஜாரிட்டியில் ஆட்சியை பிடித்து முதலமைச்சராக பதவி ஏற்றவுடனேயே, முந்தைய திமுக அரசு கஜானாவைக் காலி செய்துவிட்டதால், கடும் நிதி நெருக்கடியில் தமிழக அரசு தவிப்பதாக கூறி, அரசு ஊழியர்களுக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.
ஒரு கட்டத்தில் இவரது நெருக்கடியை தாங்கிக்கொள்ள முடியாத ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஜெயலலிதா, போராட்டத்தில் ஈடுபட்ட 4 லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்தார்.
அதோடு நிறுத்திக் கொள்ளாமல், உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 15 ஆயிரம் ஊழியர்களை தற்காலிகமாக நியமித்தார். டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை ஆணை பெற்றத்தை தொடர்ந்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததது. புதியதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களும் பணியில் தொடர்ந்தனர்.
இதற்கு அடுத்த இடியாக, அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப தடை விதித்தார் ஜெயலலிதா. இதனால் ஒவ்வொரு துறையிலும் உள்ள பணியாளர்களுக்கு வேலை பளு அதிகரித்தது. காலி இடங்களை நிரப்பக் கோரி பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தியும் எந்தவித பிரயோசனமும் இல்லை.
ஆனால் அத்தியாவசியப் பணிகள் என கருதப்படும் காவல், மருத்துவம், ஆசிரியப்பணி ஆகிய மூன்று துறைகளுக்கு மட்டுமே பணியாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2006ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரஸ் தயவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது தி.மு.க. முதலமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்றவுடன் வேலைக்கான தடை ஆணைய நீக்கினார்.
2006ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி முதல் இந்த வயது தளர்வுச் சலுகை அமலுக்கு வந்தது. அதோடு 5 ஆண்டுகளாக அரசுத்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையில் கருணாநிதி ஈடுபட்டார்.
வயது கடந்து விட்டதால் இனி அரசு வேலை கிடைக்காது என்று நினைத்தவர்களுக்கு கருணாநிதி இனிப்பு செய்தியாக வயது வரம்பை உயர்த்தினார். இதனால் வேலை வாய்ப்பில் பதிவு செய்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்ட இளைஞர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக வயது தளர்வுச் சலுகை அமல்படுத்தப்பட்டது. ஐந்தாண்டுகள் வயது தளர்வு என அறிவிக்கப்பட்டது.
2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமல்படுத்தப்பட்ட பணி நியமன தடைச் சட்டம் காரணமாக, அரசின் மற்ற எந்தத் துறைகளுக்கும் நேரடி நியமனங்கள் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால், தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேதனை தெரிவித்தனர்.
அதாவது, குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு 35 என்றால், ஐந்தாண்டுகள் வயது தளர்வுச் சலுகையுடன் சேர்த்து 40 வயதுக்குட்பட்டவர்கள் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இதனால், ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற விண்ணப்பிக்கும் வாய்ப்பு பெற்றனர்.
இதைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசுத்துறையில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட்டது. இதில் மறக்க முடியாதது என்னவென்றால் 2007ஆம் ஆண்டு 2,500 கிராம நிர்வாக அலுவலர்களை தேர்வு செய்ததுதான். இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் தங்களுக்கு வேலைக்கு கிடைக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு தமிழக அரசு தற்போது ஆப்பு வைத்துள்ளது. அரசுப் பணித் தேர்வுகளை எழுத இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஐந்தாண்டு வயது தளர்வுச் சலுகை அடுத்த ஆண்டு (2011) ஜூலை வரை மட்டுமே அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐந்தாண்டு வயது தளர்வுச் சலுகை எந்த ஆண்டு வரை அமலில் இருக்கும் என்பது குறித்து தேர்வு எழுதும் இளைஞர்கள், அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் யாருக்கும் தெளிவான விவரம் தெரியவில்லை.
இந்நிலையில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலர் கே.என்.வெங்கடரமணன் வெளியிட்ட அரசு உத்தரவில், ''2006ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி முதல் 2011ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டுமே வயது தளர்வுச் சலுகை அமலில் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அறிவிக்கைகளில் உள்ள வயது வரம்புடன் ஐந்தாண்டு வயது தளர்வுச் சலுகையைச் சேர்த்துக் கொள்ளலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் பல்வேறு தேர்வுகள் இப்போது நடத்தப்படவுள்ளன. குரூப் 1, குரூப் 2, வி.ஏ.ஓ. ஆகியன அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள மற்றும் அறிவிக்கவுள்ள முக்கியமான தேர்வுகளாகும். தற்போது வயது வரம்பை தமிழக அரசு தளர்த்த உள்ளதால் அரசு வேலைகிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக