செவ்வாய், 28 செப்டம்பர், 2010

அடால்ஃப் ஹிட்லர் ஒரு தோல்வியடைந்த ஓவியர்!


உலகின் மிகக் கொடூரமான எதேச்சதிகாரியான, நாஜி ஜெர்மனியின் அதிபரான, அடால்ஃப் ஹிட்லர் தனது ஆரம்ப காலங்களில் ஒரு ஓவியராக இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! தீவிர கலை உள்ளத்திலிருந்து தீவிர ஆதிக்க வெறி உருவாகிவிட்டதோ என்று கலை எதிர்ப்பாளர்கள் உணர்ச்சி வசப்படவேண்டாம்!

அவரும் தனது கலை உள்ளத்தை வெளிப்படுத்த ஓவியத்தை வரைந்தாரா என்பது தெரியவில்லை, ஆனால் அப்போது அவரிடம் சல்லிகாசு கிடையாது என்றும் அதனால் தன் வாழ்வாதாரத்திற்காக அவர் ஓவியம் வரைந்தார் என்றும் கூறப்படுகிறது.

1908ஆம் ஆண்டு அவர் வரைந்த ஓவியங்கள் இந்த ஆண்டு ஏலத்திற்கு வருகிறது. 1,50,000 பவுண்டுகளுக்கு அந்த ஓவியங்கள் விற்கப்படலாம் என்று லண்டனிலிருந்து வெளிவரும் 'டெய்லி டெலிகிராஃப்' பத்திரிக்கை செய்தி கூறுகிறது.

ஆஸ்ட்ரியா நாட்டின் ஒரு மிகப்பெரிய பண்ணையில் இந்த ஓவியங்களை கண்டெடுத்தவர் பெயர் தெரியாத ஒரு வழக்கறிஞர்.

மிகப்பெரிய பண்ணை நிலத்தைச் சுற்றியுள்ள காட்சிகளை அவர் வாட்டர் கலர் பெயிண்டிங் செய்துள்ளார் ஹிட்லர். சாலை, சர்ச், தொழிற்சாலைகளின் வரிசை என்று அவர் ஓவியம் தீட்டியுள்ளார்.

அந்தக் காலங்களில் அவரது ஒரே வேலை வெளியே சென்று ஓவியம் தீட்டுவதாக மட்டுமே இருந்ததாக முல்லாக்ஸ் ஏல நிறுவனத்தின் ரிச்சர்ட் வெஸ்ட்வுட் என்பவர் தெரிவிக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் அவரிடம் காசு பணம் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

FILE
வியன்னாவில் உள்ள கலை/ஓவியக் கழகத்தில் ஹிட்லர் தொழில்பூர்வ ஓவியராவதற்காக விண்ணப்பம் செய்திருந்ததாகவும், ஆனால் இரண்டு முறை அவரது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்றும் லண்டன் நாளேடு செய்திக் குறிப்பு கூறுகிறது.

அப்போது ஹிட்லர் மனிதர்களை ஓவியத்தில் வரையும் போது அவரது சிந்தனை சரியாக இல்லை என்ற காரணத்தினால் அவரை நிராகரித்தனர் என்றும் கூறப்படுகிறது.

விண்ணப்பம் மறுக்கப்பட்டது, அவரை ஒரு ஓவியராக ஏற்கப்படாதது குறித்து நிறைய ஆய்வுகள் நடைபெற்றன. ஆனால் அவரை ஓவியராக ஏற்று கொண்டிருந்தால் வரலாற்றில் அவர் செய்த கொடூரமும், ஜெர்மன் மக்களை காலங்காலமாக குற்றவுணர்வில் தள்ளிய யூதப்படுகொலைகளும், இரண்டாம் உலகப் போரும் நடைபெறாமலே கூடப் போயிருக்கலாம் என்றும் ஒரு சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓவியக் கழகம் ஒரு கலைஞனை இழந்ததோ என்னவோ தெரியாது, ஆனால் அவர் மனுவை ஏற்காததுதான் அவரது மனதில் ஆழமான மனித விரோத சிந்தனைகளை வளர்த்திருக்கும் என்று ஒரு சிலர் கருதுகின்றனர்.

ஹிட்லரின் ஓவியங்கள் இம்மாதம் 30ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக