புதன், 15 செப்டம்பர், 2010

உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக குழந்தைகள் இறக்கின்றன!


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளில், 18.3 இலட்சம் குழந்தைகள் 5 வயதை எட்டுவதற்கு முன்னரே இறந்துபோகின்றன என்று ‘குழுந்தைகளைக் காப்போம’ என்கிற பன்னாட்டு அமைப்பு நடத்திய ஆய்வி்ல் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் சிறக்கிறது, பறக்கிறது என்று புள்ளி விவரங்களை வைத்து மத்திய, மாநில அரசுகள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற நிலையில், ‘வாழ்வதற்கான ஒரு நியாயமான வாய்ப்பு’ (A fair chance to Life) என்ற பெயரில் உலகளாவிய அளவில் குழந்தைகள் நலன் குறித்த அந்த ஆய்வு, இந்தியாவில் பிறக்கும் 48 விழுக்காடு குழந்தைகள் சத்துணைவு அற்ற நிலையில் வளர்வதாகவும், 20 விழுக்காடு குழந்தைகள் மிகவும் சத்தற்ற உணவையே பெறுகின்றன என்றும், பிறக்கும் குழந்தைகளி்ல 22 விழுக்காடு மிகக் குறைந்த எடையுடன் பிறப்பதாகவும் கூறியுள்ளது.

பிறந்த 5 வயதிற்குள் இறக்கும் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவை பிறந்த ஒரு மாதத்தில் இறப்பதாக கூறியுள்ள அந்த ஆய்வறிக்கை, சமூகத்தின் கீழ் தட்டில் வாழும் மக்களிடையே பிறக்கும் குழந்தைகளே, மூன்றில் இரண்டு பங்கு 5 வயதிற்குள் இறக்கின்றன என்று கூறியுள்ளது.

ஆயினும் குழந்தை இறப்பு விகிதம் 1990ஆம் ஆண்டு புள்ளி விவரத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. 1990இல் ஆயிரத்திற்கு 116 குழந்தைகள் பிறந்த 5 ஆண்டுகளில் இறந்தன, அந்த விகிதம் 200இல் 69 ஆக குறைந்துள்ளது.

2000வது ஆண்டு பிறந்தபோது நிர்ணயிக்கப்பட்ட புத்தாயிரம் மேம்பாட்டு இலக்குகளின் (Millennium Development Goals - MDG) படி, இறப்பு எண்ணிக்கை அடுத்த ஏழு ஆண்டுகளில் (அதாவது 2007ஆம் ஆண்டிற்குள்) அப்போது இருந்ததைவிட 6.28 விழுக்காடு குறைந்திருக்க வேண்டும். ஆனால் இந்த இலக்கில் இந்தியா சாதித்துள்ளது 2.25 விழுக்காடு மட்டுமே!

FILE
இந்தியாவில் 5 வயதிற்குள் இறக்கும் குழந்தைகளில் 90 விழுக்காடு நிமோனியா (கபவாதம் என்றழைக்கப்படும் நுரையீரல் வீங்கும் நோய்), சின்னம்மை, வாந்திபேதி, மலேரியா ஆகியவற்றால் இறக்கின்றன.

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் உடல் நிலை, ஆப்ரிக்காவில் உள்ள மிக வறுமையான நாடுகளில் உள்ள குழந்தைகளின் நிலையை ஒத்துள்ளது என்று கூறியுள்ள அந்த அறிக்கை, எதியோப்பியாவில் உள்ள குழந்தைகளின் நிலையை விட மூன்று மடங்கு அதிகமாக இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களில் குழந்தைகளின் நிலை உள்ளதென அந்த அறிக்கை கூறுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, நாடுகள் வரிசையில் பிறந்த குழந்தைகள் 5 வயதிற்குள் சாகும் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடு உலகிலேயே இந்தியாவில்தான் என்று கூறியுள்ளது அந்த அறிக்கை.
ஐ.நா.வின் புத்தாயிரம் மேம்பாட்டு இலக்குகள்:

1. வறுமையையும் பசிப்பிணியையும் ஒழிப்பது

2. அனைவருக்கும் ஆரம்ப கல்வியை முழுமையாக அளிப்பது

3. ஆண் பெண் சமத்துவத்தை ஏற்படுத்துவது, பெண்களை அதிகாரமயப்படுத்துவது

4. குழந்தைகள் இறப்பைத் தடுப்பது

5. மன நலத்தை அதிகரிப்பது

6. ஹெச்ஐவி, எய்ட்ஸ் உள்ளிட்ட கொடும் நோய்களை தடுப்பது

7. வளங்குன்றா சுற்றுச் சூழலை உருவாக்குவது

8. பரந்த மேம்பாட்டிற்கான உலகளாவிய கூட்டாணைமையை ஏற்படுத்துவது.

இந்த இலக்குகளில் எந்த அளவிற்கு இந்தப் பத்து ஆண்டுகளில் சாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய வரும் 20ஆம் தேதி முதல் 3 நாட்கள் நியூ யார்க் நகரில் மாநாடு கூட்டப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் இந்த புத்தாயிரம் மேம்பாட்டு இலக்குகளை நிறைவேற்றும் திட்டத்தில் இந்தியா உட்பட 192 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக