திங்கள், 4 அக்டோபர், 2010
மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய ஆப்பிள்!
சியாட்டில்: தொன்னூறுகளின் இறுதியில் நடந்த மேக்ஸ்வேர்ல்டு எக்ஸ்போ கண்காட்சி...
அன்றைக்கு மிகவும் சிக்கலில் மூழ்கியிருந்தது ஆப்பிள் நிறுவனம். அதன் தயாரிப்புகள் எதுவும் வேலைக்காகவில்லை. அந்த சமயத்தில் இந்த நிறுவனத்தில் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்து, முட்டுக் கொடுத்து நிறுத்தியது ஒரு நிறுவனம்.... அது.. ஆப்பிளின் பரம எதிரி எனப்பட்ட பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட்!.
கிட்டத்தட்ட மூழ்கிக் கொண்டிருந்த ஒரு கப்பலை மேலே கொண்டு வந்ததைப் போன்ற ஒரு பணியை பில் கேட்ஸ் செய்தார். ஓட்டளிப்பு உரிமையில்லாத பங்குகளை அவர் வாங்கிக் கொண்டார். அத்துடன் ஆப்பிள் கம்ப்யூட்டர்களிலும் செயல்படத்தக்க விதத்தில் மைக்ரோசாப்ட் மென்மொருளை உருவாக்கிக் கொடுத்தார் (முன்பு ஆப்பிள் கணிப்பொறிகளை வாங்க அனைவரும் தயங்கியதற்குக் காரணம், மைகேரோசாப்ட் மென்பொருளை அவற்றில் செயல்படுத்த முடியாமலிருந்ததுதான்!). அன்றைக்கு கம்ப்யூட்டர் உலகின் முடிசூடா மன்னன் மைக்ரோசாப்ட்தான். அதற்கு மாற்றே இல்லாத நிலை.
13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிலைமை அப்படியே தலைகீழ்... ஐபோன், ஐபாட், ஐபேட் என ஆப்பிள் தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலை. சந்தை மூலதன மதிப்பில் இன்று மைக்ரோசாப்டை அப்படியே பின்னுக்குத் தள்ளிவிட்டது ஸ்டீவ் ஜாப்ஸின் தலைமையிலான ஆப்பிள்!
இன்றைய நிலவரப்படி ஆப்பிளின் மார்க்கெட் மதிப்பு 241.5 பில்லியன். மைக்ரோசாப்ட் மதிப்பு 239.5 பில்லியன் டாலர்!
அமெரிக்க நிறுவனங்களில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது ஆப்பிளுக்கு. அடுத்த இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள மைக்ரோசாப்ட்.
நிச்சயம் தனது நிறுவனத்துக்கு இப்படியொரு நிலை வரும் என்று பில்கேட்ஸ் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார் என்கிறது அமெரிக்காவின் பிரபல பத்திரிகை. அதாவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதென்பார்களே... அப்படி ஒரு நிலை பில்கேட்ஸுக்கு. காரணம், ஆப்பிளில் முதலீடு செய்யுமாறு கூவிக் கூவி அழைத்தும் ஒரு டாலர் தரக்கூட ஒருவரும் முன்வரவில்லை அன்றைக்கு!
அன்று ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஒரு பில்கேட்ஸ் தேவைப்பட்டார். இன்று சரிவிலிருந்து நிமிர பில்கேட்ஸுக்கு ஒரு ஸ்டீவ் பால்மர் (மைக்ரோசாப்ட்டின் இன்றைய சிஇஓ) மட்டும் போதாது, ஸ்டீவ் ஜாப்ஸ்களும் தேவை என்று கமெண்ட் அடித்துள்ளது அந்தப் பத்திரிகை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக