வெள்ளி, 22 அக்டோபர், 2010
வண்டியின் பின்னால் ஓடியதால் கொசு மருந்து கரும்புகையால் சிறுமியின் முகம் கருகியது!
ஆர்.கே.நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. கொசு மருந்து வண்டியை வைத்து, மாநகராட்சி ஊழியர் ஒருவர் ஒவ்வொரு தெருவாக கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆர்.கே. நகர் 1-வது தெருவில் கொசு மருந்து அடித்தபோது அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்- சிறுமிகள் பலர், வண்டியின் பின்னால் ஓடினர். அதே தெருவில் வசித்து வரும் செல்வம் என்பவரின் மகள் லத்திகா (வயது 7)வும் கொசு மருந்து வண்டியின் பின்னால் ஓடினாள். திடீரென சிறுமி லத்திகா, அய்யோ, அம்மா என்று அலறி துடித்தபடி கீழே விழுந்தாள்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து சிறுமியை தூக்கினர். லத்திகாவின் முகம் தீயில் கருகி இருந்தது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்தாள். உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் லத்திகாவை சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து லத்திகாவின் தந்தை செல்வம் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து துறை போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆர்.கே. நகர் பகுதியில் கொசு மருந்து வண்டியின் பின்னால் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் ஓடி விளையாடுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது என்றும், இதனை பெற்றோர்களும் கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. கொசு மருந்து வண்டியில் இருந்து வெளிவந்த கரும் புகை, அனலுடன் வந்ததால்தான் சிறுமியின் முகம் கருகியதாக அப்பகுதி பொது மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே கொசு மருந்து அடிக்கும் வண்டிகளை சரியாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக