திங்கள், 4 அக்டோபர், 2010

எந்திரன் விமர்சனம்!


ரசிகர்களாலும், மீடியாக்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் எந்திரன். ர‌ஜினி, ஷங்கர், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் போன்ற பிரமாண்ட பெயர்களால் எந்திரன் மீதான எதிர்பார்ப்பு வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்ததை சாதாரண ரசிகர்களும் அறிவர். என்டிடிவி உள்ளிட்ட ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் எந்திரனை மகத்தான திரைப்படம் என்று வர்ணித்து வரும் நிலையில் இப்படத்தை விமர்சனம் செய்வதென்பது சவாலான விஷயமாகும்.

முதலில் எந்திரன் கதையை பார்ப்போம். வசீகரன் என்ற விஞ்ஞானி பத்து வருடங்கள் உழைத்து மனிதன் போலவே இருக்கும் ரோபோ ஒன்றை உருவாக்குகிறார். இந்த ரோபோவை ஒத்துக்கொள்ள மறுக்கிறார் வசீகரனுக்கு குருவாக இருக்கும் நபர். தனது சிஷ்யன் தன்னால் முடியாததை சாதித்துவிட்டான் என்ற கோபமே இதற்கு முக்கிய காரணம். இரண்டாவது இந்த ரோபோவுக்கு மனித உணர்வுகள் என்னவென்று தெ‌ரியாது. சொன்னதை செய்யும். மனித உணர்வுகள் இதற்கு பொருட்டல்ல.

இந்த ஒரு பலவீனத்தை வைத்து வசீகரனின் மகத்தான கண்டுபிடிப்பை நிராக‌ரிக்கிறார் குரு. இதனால் தனது கண்டுபிடிப்பான மனித ரோபோவை இந்திய ராணுவத்தில் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், உயி‌ரிழப்பை குறைக்க வேண்டும் என்ற வசீகரனின் கனவு நிராக‌ரிக்கப்படுகிறது.

இதனால் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட எந்திரத்துக்கு மனித உணர்வுகள் கிடைக்கச் செய்கிறார் வசீகரன். மனித உணர்வு கிடைக்கப் பெற்ற எந்திர மனிதன் தன்னை உருவாக்கிய வசீகரனின் காதலியையே காதலிக்கிறது. இதனை விரும்பாத வசீகரன் எந்திரனை கண்டம் துண்டமாக வெட்டி குப்பையில் எறிகிறார். இதனை அறிந்த வசீகரனின் குரு மனித எந்திரனுக்கு உதவி செய்து அவனை மீண்டும் முழுமையான எந்திரனாக்குவதுடன் அவனுக்குள் அழிக்கும் சக்தியையும் புகுத்துகிறார்.

அழிக்கும் சக்தி பெற்ற எந்திரன் வசீகரனின் காதலியை கவர்ந்து செல்ல, வசீகரன் அதன் கொட்டத்தை அடக்கி காதலியை எப்படி மீட்டுக் கொள்கிறார் என்பதே எந்திரன் படத்தின் கதை.

படத்தின் கதையை படிக்கும் போதே எந்திரனை எப்படி உருவாக்கியிருப்பார்கள், அதனை எப்படி தத்ரூபமாக உலவவிட்டிருப்பார்கள் என்று பார்க்க ஆவலாக இருக்கும். இந்த வேலையை ஹாலிவுட்டின் பிரபல நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு மட்டும் ஏறக்குறைய அறுபது கோடிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஹீரோ ர‌ஜினியை தத்ரூபமாக எந்திரனாக காட்டுவது, கிளைமாக்ஸில் எந்திரன் ர‌ஜினி தனது ஒவ்வொரு பார்ட்ஸையும் தனித்தனியாக கழற்றுவது போன்ற காட்சிகளை அச்சு அசலாக காட்டியிருக்கிறார்கள். அறுபது கோடிக்குப் பதில் அறுநூறு கோடி கொடுத்திருந்தால் இன்னும் மிரட்டியிருப்பார்கள். ஆக, பணத்தை முன்னிறுத்தாமல் நமது ஆட்கள் குறிப்பாக படத்தின் இயக்குனர் ஷங்கர் என்ன செய்திருக்கிறார் என்று பார்ப்போம்.

வசீகரன் (ர‌ஜினி) பத்து வருடங்கள் இந்த மனித ரோபோவை உருவாக்க கஷ்டப்பட்டதாக சொல்கிறார்கள். இதற்கு காட்சி எதுவும் வைக்கவில்லை. வசீகரனே இந்த‌த் தகவலை சொல்கிறார். பத்து வருஷம் கஷ்டப்பட்டதை காட்ட இயக்குனர் தனது கற்பனையிலிருந்து செலவழித்தது வசீகரனின் ஒட்டுத் தாடியும் நீண்ட தலைமுடியும் மட்டுமே. இந்த பத்து வருட இடைவெளியில் இவர் ஐஸ்வர்யா ராயையும் காதலிக்கிறார். காதலிக்கு நேரம் செலவழிக்காததை காட்ட ஒரு காட்சியும் அதனைத் தொடர்ந்து ஒரு டூயட்டும் படத்தில் உள்ளது. ஒட்டுமொத்த படத்தைப் பார்க்கும் போது காதலிக்கு நேரம் செலவழிக்காததை காட்ட அல்ல, டூயட்டுக்காகவே இந்த காட்சி வைக்கப்பட்டுள்ளது என்பதை ஒருவர் உணர முடியும்.

மனித எந்திரன் (இதுவும் ர‌ஜினியே) செய்யும் சாதனைகளும், அசட்டுத்தனங்களும் படத்தின் முன்பகுதியில் பிரதானமாக வருகிறது. டிவியை போடு என்று சொன்னால் டிவியை ஆன் செய்யாமல் கீழே போடுகிறது. தீயில் சிக்கியவர்களை காப்பாற்று என்ற சொன்னால் இளம் பெண் குளித்துக் கொண்டிருக்கும் போது நிர்வாணமாக காப்பாற்றி எல்லோருக்கும் முன்பாக கொண்டு வந்து நிறுத்துகிறது. எந்திரத்துக்கு மனித உணர்வுகள் இல்லை என்பதை காட்டும் இந்தக் காட்சிகள் படத்தில் அத்தனை உறுத்தாமல் பொருந்திப் போவதை பாராட்டியே ஆக வேண்டும்.

வசீகரன் எந்திரனுக்கு மனித உணர்வுகளை ஒரு கணிதம் போல் எழுதி காண்பிக்கும் காட்சிக்கு இரண்டு முகங்கள் உள்ளது. நகைச்சுவை உணர்வு உள்ளவர் அதனை அந்த கோணத்தில் எடுத்துக் கொள்ளலாம், சீ‌ரியஸான ஒரு மனிதர் அதனை சீ‌ரியஸாக எடுத்துக் கொள்ளலாம். ஆக, இப்போது எந்திரனுக்கு மனித உணர்வுகள் வந்துவிட்டது. அது வசீகரனின் காதலியை காதலிக்க‌த் துவங்கிவிட்டது. கல்யாணத்தன்று அது காதலியை கடத்தியும்விட்டது. இனி கிளைமாக்ஸ்.


படத்தின் முக்கால்வாசி பட்ஜெட் இந்த கிளைமாக்ஸுக்கு செலவிடப்பட்டிருக்கும் என்பதை படத்தின் பின்னணி இசையை கேட்கும் ஒரு குருடன்கூட உணர்ந்து கொள்வான். எந்திரனின் கொட்டத்தை அடக்க வசீகரன் பல விஷயங்கள் சொல்கிறார். மியூட் செய்யப்பட்ட இந்தக் காட்சியை பார்க்கும் போது ஒருவர் பெ‌ரிதாக எதிர்பார்ப்பது தவறல்ல. ஆனால் வசீகரன் சிட்டியின் மின்சார சப்ளையை கட் செய்ய‌ச் சொல்வதும், எந்திரனைப் போலவே இருக்கும் நூற்றுக் கணக்கான எந்திரன்கள் கார் பேட்ட‌ரியிலிருந்து ‌‌ரீசார்‌‌ஜ் செய்துக் கொள்வதும் குழந்தைகளை குதூகலிக்கச் செய்யும் சமாச்சாரங்கள். இறுதியில் எந்திரன்கள் பந்தாகவும், பாம்பாகவும், ராட்சஸ மனிதனாகவும் மாறி அட்டகாசம் செய்யும் காட்சிகள் ராம.நாரயணனின் ‌‌ரீவை‌ண்ட் எபிசோடுகள். கொட்டாவி விடாமலிருப்பவர்களுக்கு ப‌ரிசு அறிவிக்கலாம்.

ர‌ஜினி என்ற மாஸ் பிம்பம் இல்லாமலிருந்தால் எந்திரனை பற்றி நினைப்பதே ஒரு தயா‌ரிப்பாளருக்கு வாழ்நாள் துர்சொப்பனமாக இருந்திருக்கும். இதிலிருந்தே படத்தின் திரைக்கதை தரத்தை ஒருவர் தெ‌ரிந்து கொள்ளலாம். ரஹ்மானின் இசையும், பின்னணி இசையும் பாஸ் மார்க்கை‌த் தாண்டவில்லை. இதனை பு‌ரிந்து கொள்ள முடியாதவர்களும், பு‌ரிந்து கொள்ள மறுப்பவர்களும் அவ‌ரின் ஸ்லம்டாக் மில்லியன‌ரின் பின்னணி இசையை மீண்டும் ஒருமுறை கேட்கவும் (கவனிக்க, பாடல்களை அல்ல, பின்னணி இசையை).

மிகப் பெ‌ரிய சாதனை செய்யும் விஞ்ஞானியின் இரு அசட்டு அசிஸ்டெண்டுகள் (சந்தானம், கருணாஸ்), நம்ம கூட்டத்துல ஒரு கறுப்பு ஆடு என்று எந்திரன் கர்‌ஜிப்பது (அப்படியே அசோகன் பட எஃபெக்ட்), வசீகரனின் குருவுக்கு சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்பு.... திரைக்கதையின் அத்தனை நூலிழையும் நொந்து நூலானவை. ர‌ஜினியின் மாஸை மட்டும் தவிர்த்தால்,

எந்திரன் - வெறும் ஆட்டுக்கல்.

பின் குறிப்பு - ஹாலிவுட் போன்ற ஒரு படத்தை தமிழில் எடுத்திருக்கிறார்கள். அதைப்போய் குறை சொல்கிறார்களே என்று சில மேதாவிகள் கோபப்படக் கூடும். அவர்களுக்கு நம் பதில், ஒன்றரை கோடி கொடுத்தால் ஒரு ஹம்மர் காரை இறக்குமதி செய்ய முடியும். கோடிகள் இருந்தால் அதை ஷங்கரும் செய்யலாம், ராம.நாராயணனும் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக