திங்கள், 11 அக்டோபர், 2010
மாறிவரும் மருத்துவம்!
மருத்துவம் என்பது நோயால் அவதிப்படுவோருக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களது நோயில் இருந்து பூரண குணமளிப்பதாகும். பாட்டி வைத்தியம் முதல் தற்போது ரோபோக்கள் செய்யும் அறுவை சிகிச்சை வரை அனைத்துமே மனிதனின் நோயைக் குணப்படுத்தவே உருவானதாகும்.
ஆனால், எல்லா இடங்களிலும் மருத்துவம் என்பது இதேக் கொள்கையுடன் செய்யப்படுகிறதா? இல்லை என்பதே பரவலானக் கருத்து.
மருத்துவர் என்பவர், நோயில் இருந்து நம்மைக் காப்பாற்றி, அவரது கட்டணத்தால் கொல்பவர் என்ற புதுக்கவிதை நிஜக்கதையாகி வருகிறது.
மருத்துவத் துறையில் ஏற்படும் முன்னேற்றத்தை விட, அதில் நடக்கும் ஏமாற்று வேலைகள்தான் அதிகம். மருத்துவமனைகளில் நடக்கும் ஏமாற்று வேலைகள் சிலவற்றை தான் நாம் இதுவரை அறிந்திருப்போம். வெளிப்படையாக தெரியாமல் நமது உடலுக்குள் எத்தனையோ தேவையற்ற மருந்துகள் செலுத்தப்படுவதை எப்படி நாம் அறிவோம்?
உதாரணமாக ஒரு சில மருத்துவமனைகளில் நடக்கும் விஷயத்தைக் கூறினால் பலரால் தாங்கவே முடியாது...
தனியார்களால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் தனியாக மருந்தகமும் இயங்கிவரும். ஒவ்வொரு மாதமும், இன்னும் சில மாதங்களில் பயன்பாடு முடிவடைய உள்ள மாத்திரைகளின் பட்டியலை எடுப்பார்கள். இது எதற்கு என்றால், (அவற்றை தேர்வு செய்து அப்புறப்படுத்த அல்ல) அந்த பட்டியல் நேராக அம்மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களின் கைக்குச் செல்லும்.
அவ்வளவுதான், அவர்களைச் சந்திக்க வரும் நோயாளிகளுக்கு இந்த மருந்துகளில் எது பொருந்துமோ அவற்றை ஒரு நாளைக்கு 2 என 30 நாட்கள் சாப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அந்த நோயாளிகளோ ஏதோ உடலுக்கு நல்ல மாத்திரை என்று நினைத்து மொத்தம் 60 மாத்திரைகளையோ, மருந்தையோ வாங்கிச் செல்வர். இதில் பாதிப்பேர் அதை முழுமையாகப் போட மாட்டார்கள். அதுவும் உடலுக்கு நல்லதுதான்.
அப்படியே சிலர் முதலில் 10 மாத்திரைக் குடும்மா என்று மருந்தகப் பணியாளர்களிடம் கேட்டால், அவர்களுக்கு முன்னமே அளித்த பயிற்சியின் படி, இந்த மாத்திரை இந்த மருந்தகத்தில் மட்டும்தான் கிடைக்கும். வேறு எங்கும் கிடைக்காது. சீக்கிரம் காலியாகிவிடும். 5 நாள் கழித்து நீங்கள் வந்து கேட்டால் கூட கிடைக்காமல் போகலாம். எனவே 30 நாட்களுக்கும் சேர்த்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்குவார்கள். இதை நம்பி நோயாளிகள் (ஏமாளிகள்) மருந்து முழுவதையும் வாங்கிச் செல்வர்.
அந்த மாத இறுதியில், மருந்தகத்தால் எடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள அனைத்து மருந்துகளும் விற்றுத் தீர்க்கப்பட்டுவிடும் என்பதுதான் இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இது வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருக்கலாம். இன்னும் சில மருத்துவமனைகளில் நடக்கும் கொடுமை சொல்லி மாளாதது.
தனியார் மருத்துவமனைகளில் சிலவற்றில் அடிக்கடி காய்ச்சல் என்று செல்பவர்களுக்கு ரத்த சோதனை எடுக்கச் சொல்கிறார்கள். ரத்த சோதனைக்கு மட்டும் சில ஆயிரங்களைப் பிடுங்கிக் கொள்ளும் நிர்வாகம், அடுத்ததாக வைக்கப் போவதுதான் பயங்கர சோதனை.
ரத்த சோதனை முடிவில் எலி காய்ச்சல் என்று கூறி குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்க வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக பல ஆயிரங்களை கரந்து விடுவார்கள். உண்மையில் நடப்பது என்ன? அவர்களுக்கு ஏதேனும் ஒரு சாதாரண வைரஸ் காய்ச்சலாக இருக்கும். அதற்குண்டான மருந்து வெளிநோயாளியாகவே இருந்து சாப்பிட்டு குணமடைந்திருக்கலாம். ஆனால் இவர்களது மருத்துவமனை அறைகளை நிரப்புவதற்காக இதுபோன்று வரும் நோயாளிகளை பிடித்து அட்மிட் பண்ணுவது சரிதானா?
நோய் என்றால் மருத்துவமனையை நோக்கி விரைந்து செல்லும் மக்கள், இனி ஒரு நிமிடம் நின்று யோசிக்க வேண்டும்? நாம் போகும் மருத்துவமனை நோயை குணமாக்குமா? அல்லது நோயை உண்டாக்குமா என்று?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக