செவ்வாய், 19 அக்டோபர், 2010
குடும்ப அட்டையும், அலைக்கழிப்பும்!
தமிழ்நாட்டில் இதுவரை குடும்ப அட்டை வாங்காதவர்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று வேலூரில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூட்டுறவு துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ஆகியவற்றில் பொது வினியோக திட்டத்தை செயல்படுத்தும் அலுவலர்களின் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார்.
குடும்ப அட்டைகளை விரைவாக வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தாலுகாவிலும் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கவுண்ட்டர்களில் துணை ஆட்சியர் நிலையில் இருக்கும் அலுவலர்களிடம் பொதுமக்கள் வருகிற 19, 20 ஆகிய 2 நாட்களிலும் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்கலாம். அப்போது அவர்களுக்கு ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். பின்னர் அந்த மனு மீது 30 நாட்களுக்குள் தணிக்கை செய்து புதிய குடும்ப அட்டைகள் வழங்கவேண்டும் என்று நேற்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.
ஆனால் குடும்ப அட்டை வாங்க மக்கள் படும்பாட்டைப் பார்த்தால் சொல்லிமாளாது. 2008ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் போலி குடும்ப அட்டைகளை முற்றிலும் களைவதற்காகவும், குடும்பத்தில் உள்ள நபர்களையும், குடும்ப அட்டையில் உள்ள விவரங்களை சரி பார்ப்பதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று தணிக்கை செய்யப்பட்டு 2009ஆம் ஆண்டு மே மாதம் முதல் போலி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டன.
அந்த தணிக்கையின்போது, வெளியூர் சென்றவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வேலைக்கு சென்று விட்டதால் வீடுகள் பூட்டப்பட்டு இருந்ததாலும், நீண்ட நாட்களாக ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் போன்றவர்களின் குடும்ப அட்டைகளும் ரத்து செய்துவிட்டுச் சென்று விட்டனர் அரசு அலுவலர்கள்.
இதுபோன்ற குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மீண்டும் விசாரணை செய்து அத்தகைய குடும்பங்களுக்கு உடனடியாக குடும்ப அட்டைகள் வழங்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் உடனடியாக குடும்ப அட்டைகளை கொடுப்பது இல்லை. அதிலும் பல நாட்கள் அலைகழிப்புதான்.
இதுவரை குடும்ப அட்டைகள் வாங்காதவர்கள் மனு செய்தால் உடனடியாக விசாரணை செய்து புதிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறுகிறார். அமைச்சர் சொல்வதோடு சரி, அதனை அதிகாரிகள் செயல்படுத்துவது கேள்விக்குறித்தான்.
இதுவரை குடும்ப அட்டை வாங்காத நரிக்குறவர்கள், அரவாணிகள், குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளில் குடியிருப்பவர்கள், காதல் திருமணம் செய்துகொண்டவர்கள், விவாக ரத்துப் பெற்றவர்கள் போன்றவர்கள் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தால் அது தொடர்பான விசாரணையை உடனடியாக முடித்து அவர்களுக்கு உடனடியாக குடும்பஅட்டை வழங்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டோடு சரி, அது முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை.
எந்தப்பொருளும் வேண்டாம் என குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 7 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் அமைச்சர் எ.வ.வேலு கூறியிருந்தார். முறையான ஆவணங்கள் வைத்திருந்தும் கூட குடும்ப அட்டை பெற மக்கள் படும்பாட்டை அமைச்சர் நேரில் சென்று பார்த்தால் புரியும். அலுவலகங்களில் இருந்து உத்தரவு போடலாம், அது செயல்படுத்தப்படுகிறதா என்பதை அமைச்சர் நேரில் சென்று பார்ப்பாரா? பார்த்திருந்தால் இதுவெல்லாம் தெரிந்திருக்கும்.
முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் ஆகியவற்றிற்காக உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்க நேரிடுகிறது. அதுவும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தான் மனுக்கள் வாங்கப்படும் என்று அலுவலகத்தில் பெரிய கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கும். அதுவும் 3 மணி நேரம் அவர்களுக்கு வேலை. அந்த வேலையையும் ஒழுங்காக செய்கிறார்களா என்றால் இல்லை.
விடுமுறை எடுத்துக் கொண்டு வரிசையில் காத்திருக்கும் பொது மக்கள், ஒரு மணி நேரம் கழித்துக் கவுண்ட்டரில் தனது மனுவை கொடுக்கும் போது இந்த மனுவை இங்கே வாங்க மாட்டோம் என்று கூறி அனுப்பி விடுகின்றனர். ஒரு மணி நேரம் காத்திருந்த மக்கள், வேறொருவரிடம் மனுக் கொடுக்க செல்கிறார்கள். அங்கும் அவர்களது மனு நிராகரிக்கப்படுகிறது. இப்படி அங்கு செல், இங்கே செல் என்று அலைகழிக்கப்படும் பொதுமக்கள், கடைசியில் விரக்தியில் குடும்ப அட்டையே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு அங்கு பணிபுரியும் அலுவலர்கள் நடந்து கொள்கின்றனர். இப்படிப்பட்ட அவலங்களை வில்லிவாக்கத்தில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் கண்கூடாக காணமுடிந்தது.
மனுவை பெற்றுக் கொள்ளும் அரசு அலுவலர்கள், பெயர் மாற்றம் என்றால், 10 நாட்கள், பெயர் சேர்ப்பு என்றால் 15 நாட்கள், பெயர் நீக்கம் என்றாலும் அதே 15 நாள்தான். இது பொதுமக்களுக்கு அலுவலர்கள் கொடுக்கும் கால அவகாசம். அந்த கால அவகாசம் முடிந்து வந்து குடும்ப அட்டையை கேட்டால் 2 நாள் கழித்து வாருங்கள் என்று அனுப்பி விடுகின்றனர். இப்படி அலைகழிக்கப்படும் பொதுமக்கள் ஒரு கட்டத்தில் அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்யும் அளவுக்கு போகிறது. இப்படியே போனால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டியதுதான்.
நடந்த நிகழ்வு ஒன்றை நம்முடைய வாசகர்களுக்கு சொல்ல விரும்புகிறோம்: தூத்துக்குடி மாவட்டம் நாலுமுளைகிணறு என்ற கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்தவர் சி.ராஜா. வேலை காரணமாக சென்னைக்கு வரும் இவர் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்கிறார். அப்போது கிராமத்தில் உள்ள தனது பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து இவரது பெயர் நீக்கப்படுகிறது. எப்படியென்றால் சி.ராஜாவுக்கு பதில் சி.ராசு என்று. அப்போது பெயர் தவறாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உண்மையான பெயர் நீக்கம் செய்து சான்றிதழ் கொடுக்கும்படி கேட்டுள்ளார் ராஜா. ஆனால் அந்த அலுவலரோ, நீங்கள் சென்னையில் உங்களது உண்மையான பெயரை சொல்லி குடும்ப அட்டையை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த நிகழ்வு 2008இல் நடந்தது.
இதையடுத்து அந்த பெயர் நீக்கம் செய்யப்பட்ட சீட்டுடன் உணவு பொருள் வழங்கல்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ள ராஜாவுக்கு பெரும் அதிர்ச்சி. உங்கள் பெயர் ராசு என்று உள்ளது. எப்படி ராஜா என்று சேர்க்க முடியும் என்று கூறிவிட்டு, அவரது மனுவை நிராகரித்துள்ளார் அலுவலர். அப்போது, தனது கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றையும் காண்பித்துள்ளார் ராஜா. ஆனால் அவருக்கு அங்கு ஏற்பட்டது ஏமாற்றம்தான். தற்போது 2010 ஆண்டு பிறந்து முடியபோகிறது. இதுவரை ராஜா, குடும்ப அட்டை வாங்கவில்லை.
இப்படி பல ராஜாக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் கவனத்திற்காகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் அலைகழிக்க விடாமல் இருப்பார்களா என்றால் கேள்விக்குறித்தான். இந்த அரசு மட்டும் அல்ல எந்த அரசு வந்தாலும் இந்த நிலை மாறப்போவதில்லை. ஏனெனில் இந்திய ஜனநாயகத்தில், அவர்கள் மன்னர்களாக அல்ல, சபிக்கப்பட்டவர்களாகவே நடத்தப்படுகின்றனர்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக