தீபாவளி நெருங்கிவிட்டது. இன்னும் இருப்பது ஒரேயொரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே. தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். நேற்றைய தினம் துணிக் கடைகள் நிறைந்த தி.நகரும், புரசைவாக்கமும் மக்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடின.
தீபாவளி பண்டிகை நவம்பர் 5-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. சரியாக சொன்னால் இன்னும் 11 நாட்களே உள்ளன. தீபாவளி என்றால் துணிகளும், பட்டாசுகளும்தான் பிரதானம். தீபாவளிக்கு துணி எடுக்க குடும்பத்துடன் துணிக் கடைக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
இன்னும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே உள்ள நிலையில், நேற்று ஏராளமானோர் கடைகளுக்குச் சென்று துணிகளை வாங்கிச் சென்றனர்.
இனிமேல் கடைக்குச் சென்று துணி எடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், அலுவலகம், பள்ளிக்கு விடுமுறை எடுத்தாலும் பரவாயில்லை என்று விடுமுறை போட்டுவிட்டு வார நாட்களில் கடைக்குச் செல்லுங்கள். அல்லது மாலையில் கடைக்குச் சென்று துணிகளை வாங்கிவிடுங்கள்.
குழந்தைகள், வயதானவர்களுடன் கடைக்குச் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம். கூட்ட நெரிசல் மிகுந்த கடைகளுக்குள் செல்வதாக இருந்தால், ஒருவரை கடையின் நுழைவாயிலில் குழந்தை மற்றும் பெரியவர்களுடன் அமர வைத்துவிட்டு துணி எடுப்பவர்கள் மட்டும் உள்ளே நுழைந்து துணியை எடுத்துவிட்டு வருவது நல்லது.
குழந்தைகளையும், பெரியவர்களையும் கூட்ட நெரிசலில் சிக்க வைக்காமல் வீட்டில் விட்டுச் செல்வது இன்னும் நல்லது. ஆனால் அழைத்துச் செல்ல வேண்டி ஏற்பட்டால் மேற்கூறியவாறு செய்யலாம்.
குழந்தைகளுக்கு விலை மதிப்புமிக்க அணிகலன்களை அணிவிக்க வேண்டாம். பையில் விலை மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச் செல்வதையும் தவிர்க்கவும்.
பொதுவாக பணமாக இல்லாமல், ஏடிஎம் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி துணி வாங்குவது நல்லது. பணத்தைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படாது.
எந்த கடைக்குச் செல்வது, எப்படி செல்வது, எப்படி திரும்புவது, மதிய நேர உணவு குறித்து முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அலைந்து திரிந்து ஒரே ஒரு கர்ச்சீப் மட்டும் வாங்கும் பழக்கத்தை பெண்கள் விட்டுவிட வேண்டும். முன்பே திட்டமிட்டு அதன்படி என்னென்ன வாங்க வேண்டும் என்று ஒரு பட்டியலைப் போட்டுக் கொண்டு அதை விடுத்து மற்றவற்றை வாங்காமல், பட்டியலில் உள்ளவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்குவது நேரத்தை மிச்சமாக்கும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிடாதீர்கள். தீபாவளிக்கு முன்பு வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான கூட்டம் கடைகளின் முன்பு குவியும். எனவே, அதற்கு முன்பே வார நாட்களில் கடைக்குச் செல்வதுதான் குடும்பத்துடன் செல்லும் நபர்களுக்கு ஏற்றது.
எப்போது சென்றாலும் மிகவும் எச்சரிக்கையுடன் செல்லுங்கள். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
தீபாவளிக்கு புத்தாடை அணிவது எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு நாம் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக