புதன், 6 அக்டோபர், 2010
சேதமடையும் உலக அதிசயம்!
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் அதனைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளாலேயே தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வருகிறது.
எறும்பு ஊரக் கல்லும் கரையும் என்பது போல, சீன நாட்டையே கட்டிக் காக்கும் அரணாக உள்ள சீனப் பெருஞ்சுவர் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் உள்ள சீனப்பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து உள்ளது.
இவ்வளவுப் பெருமை மிக்க சீனப் பெருஞ்சுவரைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேலானோர் சீனாவுக்கு வருகிறார்கள். இதனால் சீனப் பெருஞ்சுவரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சீனப் பெருஞ்சுவரைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்தபடியே சாப்பிடுவது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றை செய்கின்றனர். சாப்பாடுகள் கொண்டு வந்த பாலித்தீன் பைகளையும், குளிர்பான பாட்டில்களையும், மதுபாட்டில்களையும் அப்படியே வீசி விட்டு செல்கின்றனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் இப்படி குப்பைகளை அள்ளி வீசும் குப்பைத் தொட்டியாக சீனப் பெருஞ்சுவர் மாறி வருகிறது. இதனால் சீனப் பெருஞ்சுவரின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது.
பீஜிங் அருகே உள்ள படாலிங் என்ற இடத்தில் உள்ள சீனப்பெருஞ்சுவரில் சுற்றுலா பயணிகள் கூடாரம் அமைத்து இரவு நேரத்தைக் கழிக்கிறார்கள். கூடாரம் அமைப்பதற்காக சீனப் பெருஞ்சுவரில் இரு கற்களுக்கு இடையே உள்ள சிமெண்ட் பகுதியில் ஆணி அடிப்பது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். போகும் போது அந்த ஆணிகளை அவசர கதியில் பிடுங்குவதால் பல இடங்களில் சுவர்கள் சேதமடைந்து வருகிறது.
இது நாளுக்கு நாள் தொடர் கதையாகி வருவதால் சில இடங்களில் சுவர் பலத்த சேதம் அடைந்துள்ளது. இப்படியே சென்றால் நமது சந்ததிகளுக்கு சீனப் பெருஞ்சுவரின் கற்குவியலைத்தான் காண்பிக்க இயலும். இந்த நிலையை மாற்ற யுனெஸ்கோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக சுற்றுலா செல்லும் பொதுமக்கள் தாங்கள் செல்லும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பை உணர வேண்டும். நமக்குப் பின் வருபவர்களுக்கு அது ஒரு சுற்றுலாத் தளமாக இல்லாமல், குப்பைத் தொட்டியாக காட்சி அளிக்க இடம் தரக் கூடாது. ஒரு இடத்தை தூய்மைப் படுத்தாமல் வேண்டுமானால் இருங்கள், ஆனால் அசுத்தமாக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை உணருவோம். சுற்றுலாவை மகிழ்ச்சியாக கழிப்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக