திங்கள், 11 அக்டோபர், 2010

புலி... பழி... போராட்டம்!


கராத்தே வீரர் ஷிகான் ஹுசைனி... கடந்த 1993-ம் ஆண்டு, தன் கைகளின் மேல்

101 கார்களை ஏறச் செய்தார். கை எலும்புகள் சிதைய, வழிந்த தன் ரத்தத்திலே அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை ஓவியமாக வரைந்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே, போயஸ் கார்டனுக்குத் தகவல் போக, உடனடியாக அழைக்கப்பட்டார். கராத்தே பயிற்சிப் பள்ளிக்காக பெசன்ட் நகர் பகுதியில் ` 9 கோடி மதிப்புள்ள 13 கிரவுண்ட் நிலத்தை ஜெயலலிதாவிடமிருந்து பெற்றார். அதன்பின்னர் சினிமா, செக்யூரிட்டி நிறுவனம், வி.சி.டி. தடுப்புப் படை என சகல திசைகளிலும் ஹுசைனி உச்சத்துக்குப் போனார்!

ஆனால், 98-ம் வருடம் 'முதல்வன்' படம் ரிலீஸான நேரம்... மதுரையில் அந்தப் படத்தின் வி.சி.டி-க்கள் பரவலாக விநியோகிக்கப்பட, அதனைத் தடுக்கும் பொறுப்பில் இருந்த ஹுசைனி, அங்கிருந்த சிலருக்கு எதிராக சீறினார். அவர்கள் பழி தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் போலி பாஸ்போர்ட் வைத்து இருந்ததாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவராகவும் ஹுசைனி மேல் 6 வழக்குகள் டெல்லி போலீஸாரால் பதிவு செய்யப் பட்டன. அத்தனை வழக்குகளுக்காகவும் போராடி வந்த ஹுசைனிக்கு, கடந்த 4-ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 'குற்றமற்றவர்' எனத் தீர்ப்பு வழங்கப்பட... 12 வருட சட்டப் போராட்டத்தை முடித்த திருப்தி யோடு காமன்வெல்த் போட்டிகளில் குதித்தார் ஹுசைனி.



கடந்த 7-ம் தேதி நடந்த வில் வித்தைப் போட்டியில் அவரது மாணவ ரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சின்ராஜ் ஸ்ரீதர் வெள்ளிப் பதக்கம் வாங்க... ஹுசைனியின் அடுத்த ரவுண்ட் ஆரம்பமாகிவிட்டதாக செம டாக்!

ஹுசைனிக்கு வாழ்த்துச் சொல்லிப் பேசினோம்.

''மூன்று மாதங்களுக்கு முன்பு, 'சின்ராஜ் ஸ்ரீதருக்கு வில் வாங்கிக் கொடுக்க உதவினால், கண்டிப்பாக அவர் சாதிப்பார்!' என மீடியாக்கள் மூலமாக அரசுக்கு கோரிக்கை வைத்தேன். அது அரசின் கவனத்தை எட்டியதா என்று தெரியவில்லை. ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து திடீர் அழைப்பு. அந்த மாணவரையும் அழைத்துப்போய் பார்த்தேன். வில் வாங்கு வதற்காக ` 2 லட்சத்தைக் கொடுத்து உதவினார். அவருடைய உதவிதான் வெள்ளிப் பதக்கத்துக்கு வித்திட்டது!'' என சிலிர்ப்பாகச் சொன்னவர், பழைய போராட்ட வாழ்க்கையின் பக்கங்களையும் நம்மிடம் புரட்டிக் காட்டினார்.

''நான் மதுரையில் பிறந்தவன், என்றாலும் என் தாய் தந்தை இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதனால், டெல்லி ஏர்போர்ட்டில் என் பாஸ்போர்ட்டை போலி எனச் சொல்லி, என்னை விடுதலைப் புலியாக சந்தேகப்பட்டார்கள். 'இங்கு இருக்கும் தமிழர்கள் யாரிடமாவது கேளுங்கள்... தமிழகத்தில் நான் எந்தளவுக்கு பிரபலமானவன் என்பதைச் சொல்வார்கள்...' எனச் சொன்னேன். ஏர்போர்ட் க்ளீனராக இருந்த ஒரு தமிழரை அழைத்துவந்து என்னைக் காட்டினார்கள். 'இவர் 'புன்னகை மன்னன்' படத்தில் நடித்தவர். இவர் விடுதலைப் புலிதான்!' என அவர் சொல்ல... எனக்கு தலைசுற்றிவிட்டது. அந்தப் படத்தில் போராளி கேரக்டரில் நான் நடித்தேன். அதைவைத்து, என்னை விடுதலைப் புலியாகவே சித்திரித்து, ஜெயிலில் அடைத்தார்கள். அப்போது, தமிழகத்தில் இருந்த போலீஸ் அதிகாரி காளிமுத்துவிடம் டெல்லி போலீஸார் என்னைப்பற்றிக் கேட்க... அவரும், 'இரண்டு மாதங்களுக்கு முன்பு மண்டபம் முகாமில் இருந்து தப்பியவர் அவர்!' என வடிகட்டிய பொய்யைச் சொன்னார். அதனால், அடுத்தடுத்து 6 வழக்குகள் போடப்பட்டன.

இதற்கிடையில் என்னைப்பற்றி தவறான தகவலைச் சொன்ன அந்த தமிழக போலீஸ் அதிகாரி, மீண்டும் என்னைக் குறிவைத்து விரட்டத் தொடங்கினார். 'உயிரே' படம் ரிலீஸானபோது திருட்டு வி.சி.டி. விற்றவர்களைப் பிடித்தேன். ஆனால், அவர்களை நான் ஏ.கே.47 துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக என் மீதே வழக்குப் போட்டார்கள். ஓவிய கண்காட்சிக்காக ஒட்டிய போஸ்டர், மதரீதியான பிரச்னையைக் கிளப்பியதாகச் சொல்லி, என் மீது வழக்குப் போட்டு என்னுடைய 147 ஓவியங்களை லாரிகளில் போலீஸ் அள்ளிக்கொண்டு போனது. ` 13 லட்சம் மதிப்புள்ள அந்த ஓவியங்கள், இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை. இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும் யாருக்கும் தலைவணங்கி என்னைக் காப்பாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை. அனைத்தையும் சட்டரீதியாகவே சந்தித்து ஜெயித்தேன். அந்த நிறைவோடுதான் என் பையன்களை காமன்வெல்த் களத்துக்கு அழைத்து வந்தேன்.

'ஜெயிச்சிட்டேன் சார்...' என என் பையன் வெள்ளிப் பதக்கத்தோடு வந்தபோது, இத்தனை வருட கஷ்டம் எங்கே போனது என்றே தெரியவில்லை..!'' என தழுதழுத்தவர், ''கராத்தே, சினிமா, சிற்பம், ஓவியம், வில் வித்தை என இனி மறுபடியும் தடதட வேகத்தோட களம் இறங்கப் போகிறேன். அடைய வேண்டிய அத்தனை வருத்தங்களையும் கடந்தாச்சு. இனி எல்லாமே வெற்றியாத்தான் இருக்கும்!'' என்கிறார் நம்பிக்கையோடு.

ஹுசைனி தற்போது நடித்துவரும் படத்தின் தலைப்பு 'முடிவு'! அது அவரைத் துரத்திய துயரங் களுக்கான முடிவாக அமையட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக