திங்கள், 25 அக்டோபர், 2010

ஆஸ்ட்ரேலியாவில் குறைந்த இந்திய மாணவர்கள்!


சில வருடங்களுக்கு முன்பு வரை உயர் படிப்புக்காக அமெரிக்கா, இங்கிலாந்தைப் போன்று ஆஸ்ட்ரேலியாவுக்கும் படையெடுத்து வந்த இந்திய மாணவர்கள், சமீப காலமாக ஆஸ்ட்ரேலியாவுக்கு செல்வது வெகுவாக குறைந்துவிட்டதாக கூறுகிறார்கள் கல்வியாளர்கள்!

உயர் படிப்புக்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஆஸ்ட்ரேலியா சென்று படிப்பது இந்திய மாணவர்களின் வாழ்நாள் கனவு மற்றும் லட்சியமாக இருந்ததற்கு, படிக்கும்போதே பகுதி நேர வேலையில் கல்விக்கட்டணத்தை சமாளித்துக்கொள்ளலாம் மற்றும் படிப்பு முடித்தவுடன் டாலர்களில் கிடைக்கும் ஊதியம், சுகபோக வாழ்க்கை போன்றவைதான் காரணமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த ஓரிரு வருடங்களாக இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்டு வந்த இனவெறி தாக்குதல்கள் மற்றும் இந்திய மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் போன்றவை இந்திய மாணவர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்திய அரசும் இது தொடர்பாக தூதரகம் வாயிலாகவும், அந்நாட்டு தலைவர்களுடன் நேரடியாகவும் பேச்சுவார்த்தை நடத்தி, இத்தகைய தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரியது.

ஆனாலும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதும், அதனை இந்தியா கண்டிப்பதுமாக நிலைமை மோசமான நிலையில்தான், ஏராளமான இந்திய மாணவர்கள் கடந்த கல்வியாண்டிலேயே படிப்பை பாதியுலேயே கைவிட்டு, மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு தாய் நாடு திரும்பினர்.

மீதமுள்ளவர்களும், கல்விக்கட்டணத்தை கட்டிவிட்டோமே என்ற பரிதவிப்பிலும், குடும்பச் சூழல் காரணமாகவும்தான் படிப்பை தொடர்ந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகத்தான் ஓரிரு சம்பவங்களைத் தவிர பெரிய அளவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக பெரிய அளவில் இனவெறி தாக்குதல் ஏதும் நடைபெறாமல் இருந்தது.

ஆனால் அந்த மகிழ்ச்சியும் அதிகம் நீடிக்கவில்லை.இந்த முறை ஆஸ்ட்ரேலிய காவல்துறையினரே எந்த அளவுக்கு இனவெறியுடன் உள்ளனர் என்பது இந்த மாத தொடக்கத்தில் அம்பலமானது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஆஸ்ட்ரேலிய காவல்துறை உயரதிகாரிகள் சிலரே தங்களுக்குள், இந்தியர்களைப்பற்றி இனவெறியுடன் கேலி மற்றும் கிண்டலாக ஒருவருக்கு ஒருவர் இமெயில்களை அனுப்பி பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இத்தகைய இமெயில்களில் இடம்பெற்றிருந்த தகவல்களை மெல்போனிலிருந்து வெளியாகும் ' த ஹெரால்டு சன்" என்ற ஆஸ்ட்ரேலிய ஊடகம் அம்பலப்படுத்தியது.

இந்தியாவில் கூட்டம் நிறைந்த ரயில் ஒன்றின் மேற்கூரையில் அமர்ந்து பயணிக்கும் இந்தியர் ஒருவர், ரயில் நிலையம் ஒன்றில் ரயில் நிற்கும்போது, எழுந்து நிற்கிறார்.

அதனைப் பார்த்து கீழே நிற்கும் பயணிகள், பயத்தில் அலறும்போதே அந்த பயணி மீது மேலே செல்லும் மின்சார ஓவர்ஹெட் கேபிள் வயரின் மின்சாரம் பாய்ந்து, அவர் உயிரிழக்கிறார்.

இந்த காட்சி அடங்கிய வீடியோவை காவல்துறை அதிகாரிகள் ஒருவருக்கு ஒருவர் அனுப்பி, ஆஸ்ட்ரேலியாவில் உள்ள இந்திய மாணவர்களின் பிரச்சனயை தீர்க்கவும் இதுதான் (மின்சாரம் பாய்ச்சுவது) சிறந்த வழி என்று கூறி, மேலும் பல கேலி, கிண்டல்கள் அடங்கிய இனவெறி வாசகங்களை அனுப்பியுள்ளனர்.

இது குறித்து ஆஸ்ட்ரேலியாவில் உள்ள இந்தியர்கள் அதிர்ச்சியடைந்தனர். காவல்துறை அதிகாரிகளே இத்தகைய இனவெறியுடன் இருக்கும்போது, தாங்கள் தாக்கப்பட்டால் தங்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என்று குமுறல்களை வெளியிட்டனர்.

இதனையடுத்து இது குறித்து டெல்லியில் இருக்கும் இந்தியாவுக்கான ஆஸ்ட்ரேலியா தூதர் பீட்டர் வர்கீஸிடம் விளக்கம் கோரியது இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம்.

அதற்கு அந்நாடு எத்தகைய விளக்கத்தை அளித்தது என்பது குறித்த தகவல் எதையும் இந்திய அரசு இன்னமும் தெரியப்படுத்தவில்லை.

இந்நிலையில்தான் இனியும் ஆஸ்ட்ரேலியவில் உயர் கல்வி பயிலச் செல்வது என்பது எமனை தேடிச் செல்வதற்கு சமமானது என்று உணர்ந்துகொண்ட இந்திய மாணவர்கள், அந்நாட்டிற்கு செல்வதை கைவிடும் முடிவுக்கு வந்துவிட்டனர்.

இதன் காரணமாகத்தான், ஆஸ்ட்ரேலிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 2011 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களின் எண்ணிக்கையில், இந்திய மாணவர்களின் வருகை 80 விழுக்காடு வரை குறைந்துபோனதாக அந்நாட்டில் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் தெரிவித்துள்ளனர்.

மெல்போர்ன் பல்கலைக்கழக துணைவேந்தர் க்ளின் டேவிஸ் இது குறித்து கூறுகையில், " இந்தியாவிலிருந்து வரும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அண்மைக்காலமாக வெளியான செய்திகளின் தாக்கம் காரணமாகவே ஆஸ்ட்ரேலியா முழுவதும் இந்திய மாணவர்களின் வருகை எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது" என்றார்.

உயர் படிப்பில் சேர இந்தியாவிலிருந்து வரும் மாணவர்களின் விண்ணப்பங்கள் 80 விழுக்காடு வரை குறைந்து போனதாகவும், சில கல்வி நிறுவனங்கள் 90 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆஸ்ட்ரேலிய கல்வி நிறுவனங்களுக்கு அயல்நாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் செலுத்தும் கல்வி கட்டணம்தான் மிகப்பெரிய வருவாயாக இருந்துவந்தது.அதிலும் அயல்நாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களாக இருந்து வந்த நிலையில், தற்போது அவர்களது வரத்து மிகவும் குறைந்து போனதால், அதனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை எண்ணி அவை அதிர்ச்சியடைந்துபோய் இருக்கின்றன

"இதுநாள் வரை ஆஸ்ட்ரேலிய கல்விநிறுவனங்கள் ஒரு சீரான வளர்ச்சியைக் கொண்டிருந்த நிலையில், இனி அது நீடிக்காது என்பது தான் உண்மை நிலையாக உள்ளது.எனவே நாங்கள் மீண்டும் பழைய இடத்திற்கு சென்று திரும்பி பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்று டேவிஸ் மேலும் கூறுகிறார்.

விதைத்ததைத்தானே அறுவடை செய்ய முடியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக