வெள்ளி, 26 மார்ச், 2010

ரூ.49,000 கோடிக்கு ஜெய்ன் டெலிகாமை வாங்கியது பார்தி ஏர்டெல்!


இந்தியாவின் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெரிய டெலிகாம் நிறுவனமான ஜெய்ன் டெலிகாமை வாங்கிவிட்டது.

10.7 பில்லியன் டாலர் கொடுத்து இந்த டீலை முடித்திருக்கிறது பார்தி. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ 49000 கோடி!

இந்திய தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்று எல்லை தாண்டி முடித்துள்ள மிகப்பெரிய வர்த்தகம் இதுவே. இதன் மூலம் உலகின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுள் ஒன்றாக மாறியுள்ளது பார்தி ஏர்டெல்.

ஆப்ரிக்காவின் 15 முக்கிய நாடுகளில் இதன் மூலம் கால் பதிக்கிறது ஏர்டெல்.

ஆப்ரிக்க மார்க்கெட்டைப் பிடிப்பதில் குறியாக இருந்த ஏர்டெல், ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவின் முன்னணி டெலிகாம் நிறுவனம் எம்டிஎன்னுடன் பேச்சு நடத்தியது. ஆனால் அது சரிவரவில்லை.

அதன் பிறகுதான் ஜெய்ன் நிறுவனத்துடன் பேச்சுக்களைத் துவங்கினார் ஏர்டெல் தலைவர் சுனில் மித்தல்.

நேற்றுதான் பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிந்து, பணம் கைமாறியது என்கின்றன செய்திகள் .

பார்சி - ஜெய்ன் இரண்டும் இணைவதன் மூலம் 165 மில்லியன் சந்தாதாரர்கள், ஆண்டுக்கு 13 பில்லியன் டாலர் வருவாய் என பெரும் தொலைபேசி வர்த்தக சாம்ராஜ்யம் உருவாகவிருக்கிறது.

அதேநேரம் இந்த ஒப்பந்தம் மூலம் சில தொல்லைகளையும் பார்தி சமாளிக்க வேண்டி வரும். குறிப்பாக நைஜீரியப் பகுதி நெட்வொர்க்கில்.

இந்த நாட்டு நெட்வொர்க்கை பார்திக்கு விற்பதை ஏற்கெனவே இகோநெட் வயர்லெஸ் என்ற தென்னாப்பிரிக்க நிறுவனம் எதிர்த்தது. இப்போது கோர்ட்டுக்கு போகப் போவதாகவும் அறிவித்துள்ளது. ஜெய்ன் நைஜீரியாவில் இகோநெட்டும் ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக