வெள்ளி, 5 மார்ச், 2010
குடும்ப வன்முறைச் சட்டத்தில் பெண்களும் தண்டிக்கப்படுவர்!
குடும்ப வன்முறைச் சட்டத்தில் பெண்களும் தண்டிக்கப்படுவர்!
பெண் சித்திரவதை என்று வருகிறபோது, அதில் ஆண்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த சித்திரவதைக்கு மூல காரணமாகத் திகழும் கணவன் வீட்டுப் பெண்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். காரணம் குடும்ப வன்முறைச் சட்டம் ஆண்களுக்கு மட்டும்தான், பெண்களுக்கில்லை என்ற நடைமுறைதான்.
இனி அந்த நிலை மாறும் என்று நம்பலாம். காரணம் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று வெளியிட்ட ஒரு அறிவிப்பு அப்படி…
செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நிவாஷினி. இவர் தனது கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தார் மீது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் புகார் செய்தார். இது தொடர்பாக நிவேந்திரன், ரஞ்சன், சரோஜா ரஞ்சன், சவுபர்நிக்கா, சரவணபவன், விஜயகுமாரி சரவணபவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, செங்கல்பட்டு 2-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் அவர்கள், ‘குடும்பநலச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் 3 பேர் பெண்கள். இந்த வழக்கில் பெண்கள் மீது குற்றம்சாட்ட வகையில்லை என்று இந்த சட்டத்தின் 12 மற்றும் 2 (கியு) பிரிவுகளில் கூறப்பட்டு உள்ளது.
அதனடிப்படையில் ஆண்களை மட்டும்தான் வழக்கில் உட்புகுத்த முடியும். எனவே இந்த வழக்கில் இருந்து பெண்களை நீக்க வேண்டும். எங்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் சி.நாகப்பன், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் இப்படிக் கூறினர்:
மனைவியை கொடுமைப்படுத்தும் கணவன் மற்றும் அவரது எந்தவொரு உறவினர் மீதும் வழக்கு தொடரலாம் என்று சட்டப் பிரிவு 1(19)-ல் கூறப்பட்டு உள்ளது. அதன்படி பார்த்தால், கணவனின் உறவினர் ஆணாக மட்டும் இருக்க வேண்டும் என்பதில்லை. எனவே மனைவியைக் கொடுமைப்படுத்தும் அவரது உறவினர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் மீது குற்றம்சாட்டுவதற்கு வழிவகை உள்ளது.
ஆனாலும் குற்றம்சாட்டப்பட்ட பெண்கள், அதில் இருந்து விடுதலை பெற வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட கோர்ட்டு மூலமாகத்தான் அதை பெற முடியும். குற்றச்சாட்டு இல்லை என்றால் வழக்கில் சேர்க்கத் தேவையில்லை. எனவே பெண்கள் என்பதற்காக வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது. குடும்ப வன்முறைச் சட்டத்தின் அடிப்படையில், பெண்கள் (கணவனின் உறவினர்கள்) மீதும் குற்றம் சாட்ட முடியும் என்று உறுதி செய்கிறோம்..”
பெண்ணாக இருந்தாலும்…
உண்மையில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005-ன் பிரிவு 2 (கியூ)வில், ஒரு பெண்ணைச் சித்திரவதை செய்யும் அவளது குடும்ப உறவினர் யாராக இருந்தாலும் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும் என்றே சொல்கிறது.
“Any adult male member who has been in a domestic relationship with the aggrieved person is the ‘respondent’. The respondent can also be a relative of the husband or male partner thus, a father-in-law, mother-in-law, or even siblings of the husband and other relatives can be proceeded against…” – Section 2 (q)
ஆனால் சட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத அல்லது, இப்படித்தான் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு காரணமாக உள்ள பெண்களை போலீசார் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். எனவே இந்த சட்டம் குறித்த முறையான அறிவை போலீசாருக்கும் வழங்க வேண்டியுள்ளது.
கணவன் மனைவியாக திருமணம் செய்து கொண்டு வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல… அப்படியெல்லாம் இல்லாமல் சும்மா சேர்ந்து வாழலாம் (அதாங்க live-in சமாச்சாரம்) என்ற வாழ்க்கை முறையைக் கொண்டவர்களுக்கும் கூட இந்தச் சட்டம் பாதுகாப்பு தருகிறது.
பாதிக்கப்பட்ட பெண் ஏதோ ஒரு வகையில் குடும்ப உறவுக்குள் வர வேண்டும். அவர் மனைவியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. சகோதரிகள், மகள்கள், கைம்பெண்கள், அம்மா, முதிய பெண்மணி.. இப்படி எந்த மாதிரி உறவாக இருந்தாலும் குடும்ப வன்முறைச் சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ், குழந்தைகளும் கூட புகார் தர முடியும். குழந்தைகளை கொடுமை செய்யும் பெற்றோர், உறவினர்களை இந்தச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து தண்டிக்க முடியும்.
ஆனால் இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் ஒரு சர்வரோக நிவாரணி ஒன்று உள்ளது. அதை போலீஸோ நீதி மன்றமோ கூட பரிந்துரைப்பதில்லை. ஒவ்வொருவரிடம் தயாராக உள்ள நிவாரணி அது.
அதுதான் அன்பு. ஒரு விலங்கைக் கூட கொஞ்சி மகிழும் நபர்களுக்கு சக மனிதனை அன்புடன் நடத்தத் தெரியாததாலேயே இத்தனைத் துயரங்களும் விளைகின்றன… இத்தனைச் சட்டங்களும் தேவைப்படுகின்றன!
இது என்றைக்கு புரியப் போகிறதோ…
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக