செவ்வாய், 9 மார்ச், 2010

பங்குச் சந்தையில் நிதி திரட்ட எஸ்பிஐக்கு அனுமதி!


டெல்லி: தனக்குத் தேவையான நிதியை பங்குச் சந்தையில் திரட்டிக் கொள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) க்கு அனுமதி தரும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

பொதுத்துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது பாரத ஸ்டேட் வங்கி. இதில் அரசுக்கு 55 சதவீத பங்கு உள்ளது. இதில் 4 சதவீதத்தை பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்து நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

2010ம் ஆண்டுக்கான பாரத ஸ்டேட் வங்கியின் திருத்த மசோதாவை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.

இதன்படி தற்போது அரசுக்குள்ள 55 சதவீத பங்குகளை 51 சதவீதமாகக் குறைத்துக் கொள்ள இந்தத் திருத்தம் வகை செய்கிறது. இவை பங்குச் சந்தை மூலம் முன்னுரிமை பங்குகளாக வெளியிடப்படும்.

1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட எஸ்பிஐ சட்டம் 1993ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. அப்போது பங்குச் சந்தை மூலம் நிதி திரட்ட அனுமதி அளிக்கப்பட்டது. பங்குகளாகவோ அல்லது கடன் பத்திரங்களாகவோ வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் முன்னுரிமை பங்கு மற்றும் போனஸ் பங்குகள் வெளியிட அனுமதி அளிக்கப்படவில்லை.

தற்போதைய திருத்த சட்டத்தின்படி பாரத ஸ்டேட் வங்கி பங்குச் சந்தையில் முன்னுரிமை பங்குகளை வெளியிட வழி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தேவையான நிதி ஆதாரத்துக்காக முன்னுரிமைப் பங்குகள் அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம் நிதி திரட்டிக் கொள்ள முடியும். சந்தையின் சூழலுக்கேற்ப முடிவு செய்து கொள்ளும் அதிகாரமும் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் அனுமதியோடு ரூ. 5,000 கோடி நிதியை பங்குச் சந்தை மூலம் எஸ்பிஐ திரட்டும்.

இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால், வங்கியில் நான்கு நிர்வாக இயக்குநரை நியமிக்கலாம். அத்துடன் துணைத் தலைவர் பதவியை முற்றிலுமாக நீக்க முடியும். ரூ. 5,000 மதிப்பிலான வங்கிப் பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் கூட இயக்குநர் பதவிக்கு போட்டியிடலாம்.

இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்ட போது, மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். எனவே இதில் அவர்கள் கவனம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விவாதம் வரும்போது இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவும் வாய்ப்புள்ளது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக