வியாழன், 11 மார்ச், 2010
புதிய சட்டசபை கட்டிட திறப்புவிழா - பிரதமர், சோனியா நாளை சென்னை வருகை.
சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலக வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங் நாளை திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். மத்திய சிறப்பு பாதுகாப்புப் பிரிவு போலீசார் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளார்கள். மொத்தமாக நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக புதிய சட்டசபை கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு தொடங்கி, 7 மணிக்கு முடிவடையும் என்றும், 7 மணி வரை பிரதமரும், சோனியாவும் விழா மேடையில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் 6 மணிக்கே விழாவை முடித்துக்கொண்டு புறப்பட திட்டமிட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய சட்டமன்ற திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர், 1 மணி நேரம் மட்டுமே இருக்கிறார். டெல்லியில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு சிறப்பு விமானத்தில் பிரதமரும், சோனியாவும் புறப்படுகிறார்கள்.
சென்னைக்கு மாலை 4.35 மணிக்கு அந்த விமானம் வருகிறது. 4.40 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தி்ல் இருந்து காரில் புறப்பட்டு, மாலை 5 மணிக்கு, புதிய சட்டமன்ற வளாகத்துக்கு பிரதமரும், சோனியாவும் வருகிறார்கள்.
அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் வழியாக புதிய சட்டசபை வளாகத்துக்கு சென்று கட்டிடத்தை பார்வையிடுகிறார்கள்.
புதிய சட்டசபை வளாக வாசலில், முதலமைச்சர் வட்டத்தின் வாயிலில் மகிழம் மற்றும் வல்சுரா ஆகிய மரக்கன்றுகளை பிரதமர் மன்மோகன்சிங் நடுகிறார்.
பிறகு, முதலமைச்சர் வட்டத்தின் நுழைவாயிலில் கட்டப்பட்டிருக்கும் ரிப்பனை வெட்டி கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மன்மோகன்.
அதைத் தொடர்ந்து அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருக்கும் பேட்டரி காரில், ஒவ்வொரு கட்டிடமாக வரிசையாக பார்த்துக்கொண்டே பிரமதரும், சோனியாவும் மேடைக்கு செல்கிறார்கள்.
மாலை 6 மணிக்குள்ளாக திறப்பு விழா நிகழ்ச்சிகளை முடிந்துக் கொண்டு, பிரதமரும், சோனியாவும் புறப்படுகிறார்கள். 6.05 மணிக்கெல்லாம் அங்கிருந்து காரில் புறப்பட்டு, 6.25 மணிக்கு விமான நிலையத்தை அடைகிறார்கள்.
அவர்களது விமானம், மாலை 6.30க்கு புறப்பட்டு, டெல்லியை இரவு 9.15 மணிக்கு சென்றடைகிறது.
போக்குவரத்து ஏற்பாடுகள்..
சட்டசபைத் திறப்பு விழாவையொட்டி சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் பெருமளவிலான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக