ஞாயிறு, 28 மார்ச், 2010
பாதி நுரையீரலுடன் வெட்டி எடுக்கப்பட்ட பேனா முனை!
பேனாவின் முனையை விழுங்கிய 8 வயது சிறுவனுக்கு சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவக் குழுவினர், அறுவை சிகிச்சை நடத்தி பேனா முனை சிக்கியதால் அழுகிப் போன நுரையீரலின் ஒரு பகுதியை வெட்டி எடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சக்திவேல் (வயது 8). தனியார் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது மை பேனாவின் கீழ் இருக்கும் மூடிப் பகுதியை விழுங்கி விட்டான்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்த போது, உணவுக் குழாய் வழியாக மூடி வெளியே வந்து விடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சில நாட்கள் கழித்து சக்திவேல் மூச்சு விடும்போது சத்தம் கேட்டது. சளி பிடித்து காய்ச்சலும் அடிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சக்திவேலுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ததில், இடது நுரையீரல் கீழ் பகுதியில் பேனா முனை இருப்பதும் அந்த பகுதியில் ரத்த ஓட்டம் தடைபட்டு பாதி நுரையீரல் அழுகி சீழ் பிடித்திருப்பதும் தெரிய வந்தது.
உடனடியாக இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் பி. மூர்த்தி, மருத்துவர் வரதராஜூலு ஆகியோர் சக்திவேலுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
நுரையீரல் பகுதியில் இருந்த பேனா முனையையும், சீழ் பிடித்து செயல் இழந்த பாதி நுரையீரலையும் வெட்டி எடுத்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் உடல் நலம் தேறி வருவதாகவும், வெட்டிய நுரையீரல் பகுதி சில நாட்களில் பழைய நிலைக்கு விரிவடைந்து விடும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
பெற்றோருக்கு எச்சரிக்கை தேவை
பேனாவின் மூடியை விழுங்கியதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பாதி நுரையீரல் வெட்டி எடுக்கப்பட்ட சக்திவேலைப் போல ஒரு ஆண்டுக்கு 300 குழந்தைகள் மருத்துவமனைக்கு வருகின்றனர் என்று அறுவை சிகிச்சை செய்த மூர்த்தி கூறியுள்ளார்.
சக்திவேலுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மூர்த்தி கூறுகையில், சேப்டி பின், ஊக்கு, குண்டூசி, புளியங்கொட்டை, பொம்மையில் உள்ள விசில், பட்டன், மீன் முள் ஆகிய பொருட்களை விழுங்கி நுரையீரலில் சிக்கி விட்டதாக ஆண்டுக்கு 300 குழந்தைகள், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
95 விழுக்காடு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் டியூப் போட்டு சிக்கியப் பொருளை எடுத்து விடுகிறோம். ஆனால் பொருள் சிக்கி சில நாட்கள் ஆகிவிட்டால், நுரையீரல் பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் அடைபட்டு, அதனால் நுரையீரல் கெட்டுப் போகிறது.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்து அழுகிய நுரையீரலை வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, குழந்தைகள் விளையாடும் போது பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மிகச் சிறியப் பொருட்கள் குழந்தைகளின் கைகளில் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோன்ற பொருட்கள் வாயில் வைத்து விளையாடும் போது பெற்றவர்கள் பிள்ளைகளை எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும். அது தவறு என்பதை எச்சரிக்கை செய்ய வேண்டும்.
அவ்வாறு ஏதேனும் பொருட்கள் சிக்கிக் கொண்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வருவது நல்லது என்றும் நீங்களே அதனை எடுக்க முயற்சிப்பதோ, மலத்தின் வழியாக வந்து விடும் என்று காத்திருப்பதோ சிக்கலை ஏற்படுத்திவிடும் என்றும் மருத்துவர் மூர்த்தி எடுத்துக் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக