திங்கள், 16 ஆகஸ்ட், 2010

அப்துல் கலாமுக்கு கார்டு அனுப்பி வாழ்த்து தெரிவித்த 1200 மாணவர்கள்!


கல்பெட்டா (கேரளா): சுதந்திர தினத்தையொட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் [^] டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுக்கு, கேரளாவைச் சேர்ந்த ஒரு பள்ளிக்கூட மாணவ மாணவியர் தபால் கார்டு மூலம் வாழ்த்து தெரிவித்து அசத்தியுள்ளனர்.

மொத்தம் 1200 மாணவ, மாணவியரும் தனித் தனியாக போஸ்ட் கார்ட் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்து சாதனை படைத்துள்ளனர்.

இளம் வயதினர் மனங்களில் சுதந்திர உணர்வை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறு செய்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தபால் கார்டு மழையைப் பார்த்து வியந்து போன கலாம், பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியைக்கு ஒரு பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில், அடுத்த முறை கேரளாவுக்கு வரும்போது கண்டிப்பாக உங்களது பள்ளிக்கு வராமல் போக மாட்டேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளாராம்.

சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடம் கேரள மாநிலம் கல்பெட்டா அருகே உள்ள முட்டில் என்ற இடத்தில் உள்ளது. அதன் பெயர் முஸ்லீம் ஆதரவற்றோர் மேல் ஆரம்பப் பள்ளி என்பதாகும். அதன் தலைமை ஆசிரியை வி.ஜே. ரோஸா இதுகுறித்துக் கூறுகையில், ஒவ்வொரு மாணவ, மாணவியும் ஒவ்வொரு விதத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

சிலர் கவிதை [^] வடித்திருந்தனர். சிலர் படம் [^] வரைந்திருந்தனர். சிலர் வெறுமனே பெஸ்ட் விஷஸ் மற்றும் சுதந்திர தின வாழ்த்துகள் என எழுதியிருந்தனர்.

நாட்டு மக்கள் [^] மனதில் குறிப்பாக இளைஞர்கள் மனில் சுதந்திர உணர்வும், நாட்டுப்பற்றும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த வித்தியாசமான ஐடியாவை அமல்படுத்தினோம். நாட்டுப்பற்று, இளைஞர்கள் என்று வரும்போது முதலில் நம் மனதில் தோன்றுவது அப்துல் கலாம்தான். மேலும் பள்ளிக்குழந்தைகளின் மனம் கவர்ந்த நாயகனும் கூட. எனவேதான் அவருக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்ப முடிவு செய்தோம் என்றார் புன்னகையுடன்.

சுதந்திர தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பே இந்த அட்டைகளை மூட்டையாக கட்டிச் சென்று தபால் அலுவலகத்தில் கொடுத்து போஸ்ட் செய்தனராம்.

முன்கூட்டியே கொடுத்தது நல்லதுதான், இல்லாவிட்டால் அடுத்த சுதந்திர தினத்திற்குத்தான் அது கலாமை சென்றடைந்திருக்கும். நம்ம ஊர் தபால் துறையின் வேகம் சில நேரங்களில் அப்படிதான் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக