புதன், 18 ஆகஸ்ட், 2010

இந்திய தொழிலதிபர்களுக்காக தயாராகும் 157 விமானங்கள்!


டெல்லி: இந்தியா [^] ஏழை நாடு என்று யாராவது சொன்னால் நிச்சயம் அவர்களை அடிக்க வந்து விடுவார்கள் வெளிநாடுகளில். காரணம், அந்த அளவுக்கு பணத்தில் புரள ஆரம்பித்துள்ளது இந்தியா.

இந்தியாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வர தொழிலதிபர்கள் 157 ஜெட் விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளனராம். எல்லாம் பெரும் பெரும் பட்ஜெட்டிலான அதி நவீன விமானங்கள்.

முக்கிய கூட்டங்கள், வர்த்தக பேரங்கள், திருமணம் [^] உள்ளிட்ட நிகழ்ச்சிகள் என வெளிநாடுகளுக்கு தினசரி பறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் நமது நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள். இதற்கெல்லாம் ஹெலிகாப்டர் சரிப்படாது, அதெல்லாம் சைக்கிள் மாதிரி ஆகி விட்டது நமது தொழிலிதபர்களுக்கு. இதனால் அதி நவீன ஜெட் விமானங்களை வாங்கிப் போட்டு விமான நிலையங்களில் பார்க் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இப்படியாக கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் மதிப்பிலான 157 ஜெட் விமானங்களுக்கு இந்தியத் தொழிலதிபர்கள் ஆர்டர் கொடுத்துள்ளனராம். அடுத்த ஆண்டுக்குள் இவை டெலிவரி செய்யப்படவுள்ளதாம். அனைத்துமே அட்டகாசமான, அதி நவீன விமானங்களாம்.

இந்த விமானங்கள் டெலிவரி செய்யப்பட்டு விட்டால், உலகிலேயே அதிக விமானங்களை சொந்தமாக வைத்திருக்கும் தொழிலதிபர்கள் நிறைந்த நாடு வரிசையில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைக்குமாம்.

தனியார் விமானங்கள் (தொழிலதிபர்கள், நிறுவனங்களுக்கு சொந்தமானது) அதிகம் வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் தற்போது 18வது இடத்தில் உள்ளது இந்தியா. இந்தியாவில் பெரும் பணக்கார நிறுவனங்களுக்குச் சொந்தமாக மட்டும் 111 குட்டி விமானங்கள் உள்ளதாம். இது சீனாவை விட அதிகம் என்கிறார்கல்.

அம்பானி சகோதரர்கள்தான் விமானங்களில் பெருமளவில் பறப்பவர்களாம். எங்கு போனாலும் விமானங்களில்தான் போகிறார்களாம். இரு சகோதரர்களும் தற்போது ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த இரு ஜெட் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனராம். அதேபோல டாடா, ரூயா, டிவிஎஸ், கேபி சிங், கெளதம் தபார், ஜின்டால் குடும்பத்தினர், சைரஸ் பூனாவாலா உள்ளிட்டோரும் புதிய ஜெட் வி்மானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனராம்.

அனைவருமே புத்தம் புதிய விமானங்களை வாங்குகிறார்கள். பழைய விமானங்களை இவர்கள் விரும்பவில்லை. பல்வேறு வசதிகளுடன் கூடியதாக ஜெட் விமானங்கள் இருக்குமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனராம்.

திடீரென அதிக அளவில் நமது தொழிலதிபர்கள் விமானங்கள் வாங்கிக் குவிக்க வேண்டிய அவசியம் என்ன?.

இதுகுறித்து பால்கன் பிசினஸ் ஜெட்களை தயாரிக்கும் டஸ்ஸால்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி போஸ்னியா ராவ் கூறுகையில், இந்திய நிறுவனங்கள் முன்பு போல இல்லை. வெளிநாடுகளிலும் அவை பெரிய அளவில் வியாபித்து வருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியர்கள் [^] வாங்குவது அதிகரித்து விட்டது. இதனால் வெளிநாடுகளுக்கு அடிக்கடி போக வேண்டியுள்ளது. சொந்த விமானத்தில் போவதையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். இதனால்தான் விமானங்களை வாங்கும் மோகம் அதிகரித்துள்ளது என்கிறார்.

மேலும், ஒரே நேரத்தில் பலரை உடன் அழைத்துச் செல்ல சொந்த விமானம் வைத்திருந்தால்தான் சவுகரியம் என்பதும் கூடுதல் காரணம்.

சென்னைக்குப் பக்கத்தில் ஒரு 40 கிலோமீட்டர் தூரத்திற்குள், அரை கிரவுண்டு இடம், சகாய விலையில் கிடைத்தால் சவுகரியமாக இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் இந்த விமானங்கள் விரைவில் 'டர் புர்'ரென்று டபாய்க்கப் போகிறது, வேடிக்கை பார்க்கலாம், வேறென்ன செய்ய முடியும் நம்மால்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக