வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மணிச் சத்தும் வருங்கால விவசாயமும்!


-சதுக்கபூதம்

பயிருக்கு தேவையான சத்துக்களில் முக்கியமானது தழைச் சத்து எனப்படும் நைட்ரஜனும், மணிச் சத்து என்னும் பாஸ்பரசும், சாம்பல் சத்து எனப்படும் பொட்டாசும் ஆகும்.

உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றாற்போல் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு உரங்களின் தேவை இன்றியமையாதது ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் 17 மில்லியன் டன் மணிச் சத்து சார்ந்த உரங்களை இடுகின்றனர். அதுமட்டுமன்றி இதன் தேவை ஆண்டொன்றுக்கு 3 சதவீதம் அதிகரித்து வருகிறது.

தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி வர தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரபடி இன்னும் 30-40 ஆண்டுகள் வரைதான் விவசாய வளர்ச்சிக்கு இணையாக மணிச் சத்து சார்ந்த உரங்களை உற்பத்தி செய்ய முடியும்.

அது மட்டுமல்ல. தற்போது உற்பத்தியாகும் மணிச் சத்தில் 90% மொராக்கோ, சீனா, தென் அமெரிக்கா, ஜோர்டான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் கிடைக்கிறது.

எண்ணெய் வளம் கூட 75% பன்னிரென்டு நாடுகளிலிருந்து கிடைக்கிறது. ஆனால், மணிச் சத்தோ 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தட்டுபாடு காலங்களில் சீனா மணிச் சத்துக்கான ஏற்றுமதி வரியை 135 சதம் உயர்த்தியது.

அமெரிக்காவின் மணிச் சத்து சுரங்கங்கள் இன்னும் 20 வருடங்களில் வற்றி விடும் அபாய நிலை உள்ளது. இதன் விளைவாக கடந்த 2003 முதல் 2006 வரை மணிச் சத்தின் விலை 350 சதம் உயர்ந்துள்ளது.

30 வருடங்களுக்கு பிறகு மணிச் சத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்தால் மால்தூஸ் கூறியபடி பெரும் பஞ்சம் வரக்கூட வாய்ப்புள்ளது.

இதற்கு தீர்வாக முழுமையான இயற்கை விவசாயத்தை நோக்கி சென்றாலும் வளரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பது கடினம்.

இதற்கு தீர்வு தான் என்ன?

1. முடிந்த அளவு மணிச் சத்தை தற்போதிலிருந்தே சானம் மற்றும் இயற்கை எருக்கள் (பசுந்தாள் உரம்) மூலம் இடத் தொடங்க வேண்டும்.

2. தேவையற்ற மணிச் சத்து உரத்தை அளிப்பதை தவிர்க்க வேண்டும். பயிருக்கு தேவையான அளவு மணிச் சத்தை தேவையான நேரத்தில் தேவையான முறையில் மட்டும் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மணி சத்து வீணாவதை குறைப்பதுடன் பயிரின் உற்பத்தி செலவை குறைத்து லாபத்தையும் பெருக்கலாம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் பயிருக்கு தேவையான மணிச் சத்தின் சரியான விகிதத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

3. மண்ணில் அதிக அளவு மணிச் சத்து உள்ளது. ஆனால் அவை தாவரங்களால் உபயோகபடுத்த முடியாத நிலை உள்ளது. ஒரு சில நுண்ணுயிர்கள் அமிலத்தை உற்பத்தி செய்து மணிச் சத்தை கரைத்து பயிர்களின் வேர்கள் உறிஞ்சும் நிலைக்கு மாற்றித் தருகின்றன. இதன் மூலம் மணிச் சத்து உரத்தின் தேவையை குறைக்கலாம். இவ்வகை நுண்ணுயிரிகளை பாஸ்போபாக்டீரியா என்று அழைக்கிறோம். இந்த நுண்ணுயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை தீவிரமாக்க வேண்டும்.

4. மணிச் சத்தை குறைந்த அளவு பயன்படுத்தி அதிக விளைச்சளைத் தரும் ரகங்களை வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வேண்டும்.

5. மனிதக் கழிவுகளில் தான் அதிக அளவு மணி சத்து உள்ளது. எனவே நகர்புற மனிதக் கழிவுகளிலிருந்து மணிச் சத்தை எடுக்கும் வழி வகையை கண்டுபிடிக்க வேண்டும்

எண்னெய் வளம் குறைந்தால் கூட அதற்கு மாற்று சக்தியாக சூரிய ஒளி,காற்று, அணு சக்தி என்று பல உள்ளது. ஆனால் மணிச் சத்து உரத்துக்கு மாற்று மேல் சொன்ன முறைகள் தான் என்பதை மறந்து விட கூடாது.

வருங்கால சந்ததியரின் உணவு தேவை குறித்து இப்போதே சிந்திப்பது நல்லது.

ஆனால், இந்த பிரச்ச்னையின் பரிமாணம் இன்னும் உலகுக்கு பெரிய அளவில் தெரியவில்லை என்பது தான் சோகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக