திங்கள், 30 ஆகஸ்ட், 2010
இன்டர்போலின் 'வான்டட்' பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள்!
டெல்லி: சர்வதேச போலீஸான இன்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதுவரை இந்தப் பட்டியலில் 656 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக ரெட் அலர்ட் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். பலர் இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள். கடந்த ஐந்து வருடங்களாக இவர்கள் தேடப்பட்டு வருகின்ரனர்.
இவர்களில் பலரும் இந்தியாவில் அல்லாமல் வெளிநாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள்.
இவர்களைப் பிடிக்க இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்டர்போல் அமைப்பு உலகின் மிகப் பெரிய சர்வதேச போலீஸ் அமைப்பாகும். இதில் 188 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
சிறு குற்றம் முதல் தீவிரவாத குற்றச்சாட்டு வரை பல்வேறு தரப்பிலான குற்றங்களைச் செய்து விட்டு தலைமறைவானோர் இன்டர்போல் மூலம் தேடப்படுகிறார்கள்.
ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள 656 பேரில், கடந்த ஆண்டு மட்டும் 150 பேருக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டது. 2006ல் 119 பேருக்கு எதிராகவும், 2007ல் 133 பேருக்கு எதிராகவும் பிறப்பிக்கப்பட்டது.
இவர்களில் பலரும் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், அமெரிக்கா, ஹாங்காங், ரஷ்யா, பெலாரஸ், எகிப்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் குற்றம் இழைத்தவர்கள் ஆவர்.
பண மோசடி, வரி ஏய்ப்பு, பாலியல் பலாத்காரம், ரயில்வே போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, இமெயில் மோசடி, வரதட்சணைக் கொடுமை என பல தரப்பட்ட குற்றங்களைச் செய்தவர்கள் இவர்கள். இவர்களில் 25 சதவீதம் பேர் அதிக வேகமாக கார்ஓட்டியது, சாலை விபத்துக்களை ஏற்படுத்தியது ஆகிய குற்றங்களில் சிக்கியவர்கள் ஆவர்.
அஸ்வினி ஸ்ரீவத்சவா என்பவர் ஆர்டிஐ மூலம் கோரிய தகவலின் கீழ் இவை தெரிய வந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக