திங்கள், 30 ஆகஸ்ட், 2010
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய 25 பேரின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டு தண்டனை விதித்ததைத் தொடர்ந்து பல இடங்களில் அ.இ.அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்த சமயத்தில் தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேருந்து, தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க.வினர் 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணராஜா விசாரித்தார். வழக்கு விசாரணையின் போது தர்மபுரி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் உள்பட 123 பேர் சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கில், தர்மபுரி நகர அ.இ.அ.தி.மு.க. செயலர் நெடு என்ற நெடுஞ்செழியன், முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலர் மாது என்ற ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் தலா ரூ.59 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
webdunia photo
WD
மேலும் 25 பேருக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தனித்தனியாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் 25 பேரும் தலா 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே ஒருவர் விபத்தில் மரணம் அடைந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் 28 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் 3 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. மற்ற 25 பேரும் தனித்தனியாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதை மாற்றி, ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் அவர்கள் அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த தீர்ப்பு கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி வழங்கப்பட்டது.
webdunia photo
WD
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் விசாரித்தனர். கடந்த ஜூலை 28ஆம் தேதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் தீர்ப்பளித்தனர். நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரின் தூக்குத் தண்டனை உறுதி செய்த நீதிபதிகள், அவர்களின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தனர்.
மேலும் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய 25 பேரின் மனுவையும் நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
நிராயுதபாணியாக இருந்த மாணவிகள் மீது தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று கூறியுள்ள நீதிபதிகள், பேருந்து திட்டமிட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது என்றும் பேருந்துக்கு தீ வைத்தது சமூகத்திற்கு எதிரான செயல் என்றும் தெரிவித்துள்ளனர்.
பேருந்து எரிப்பை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த தண்டனையை எதிர்த்து 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். அதிலும் அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டால் குடியரசுத் தலைவரிடம் கருணா மனு கொடுக்கலாம். அந்த மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டால் 3 பேருக்கும் தூக்கு உறுதி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக