திங்கள், 2 ஆகஸ்ட், 2010

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி!


கோவை: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும். கோப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கோவையில் அமைக்கப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்வர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,

இங்கு அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழா பெரும் சீரும் சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த தகவல் தொழில் நுட்ப பூங்கா உருவாவதற்கு நான் தான் காரணம் என்று இங்கு பேசியவர்கள் கூறினார்கள்.

முரசொலி மாறன்தான் காரணம்

ஆனால் 1988-1989-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நான் வரவு-செலவு திட்டத்தை பேரவையில் வைத்த போது டெல்லியிலிருந்து முரசொலி மாறன் தொலைபேசி மூலமும், கடிதம் மூலமும் தொடர்பு கொண்டு தகவல் தொழில் நுட்ப கொள்கை வகுத்தல் பற்றிய அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்பேரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொள்கை அறிவிக்கப்பட்டது. அதை இந்த நேரத்தில் நான் நினைவு கொள்கிறேன்.

தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பபூங்கா அமைவதற்கு காரண கர்த்தாவாக விளங்கியவர் மறைந்து முரசொலி மாறன் தான். இது போன்ற தகவல் தொழில்நுட்ப பூங்கா சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் வளர வேண்டும். இந்தியா முழுவதும் தகவல் தொழில்நுட்பபூங்காக்கள் வளர்ந்து உள்ளன. அவரை நான் இந்த நேரத்தில் நினைவில் கொள்கிறேன். இந்தியா முழுவதும் தகவல் தொழில்நுட்ப பூங்கா தற்போது வளர்ந்து வருகிறது.

என்னை வளர்த்த நகரம் கோவை

கோவை எனக்கு புதிது அல்ல. கடந்த 1947-ம் ஆண்டிலேயே கோவை நகரில் நான் வளர்ந்தவன். கோவை என்னை வளர்த்து ஆளாக்கிய நகரம். திரைப்படத்துறை மூலமாகவும் எனக்கு கோவையுடன் தொடர்பு உண்டு. அந்த வகையில் கோவையில் உள்ளவர்களுக்கு நான் சொந்தக்காரன் தான். கோவைக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் அப்போதே நினைத்திருந்தேன்.

பஞ்சாப் மாநில முதல்-அமைச்சராக இருந்த குர்னால் சிங் என்னை அந்த மாநிலத்துக்கு அழைத்திருந்தார். அப்போது நான் அங்கு சென்று பஞ்சாப் மாநிலத்தில் அமைந்திருந்த விவசாய பல்கலைக்கழகத்தை பார்த்தேன். அதை பார்த்து விட்டு அது போன்ற விவசாய பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது என் நினைவுக்கு வந்தது கோவை தான். அதன்பேரில் தான் கோவையில் விவசாய பல்கலைக்கழகம் அமைத்தேன். அந்த பல்கலைக்கழக மாணவிகள் தர்மபுரியில் சுற்றி பார்க்க சென்ற போது எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

கோவை என்னை வளர்த்து ஆளாக்கிய நகரம் ஆகும். எனக்கு ஊக்கமும், ஆக்கமும் தந்தது கோவை தான். கோவையில் டைடல் பார்க்கை திறந்து வைத்தது எனது கடமைகளில் ஒன்று. உலகம் போற்றும் வகையில் கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.

இங்கு பேசிய தகவல் தொழில்துறை முதன்மை செயலாளர் தமிழில் பேச வேண்டும் என்ற ஆர்வத்தில் பேசினார். அது செம்மொழி மாநாடு தந்த ஊக்கம் ஆகும். இங்கு நான், துணை முதல்வர், தலைமை செயலாளர் மற்றும் அமைச்சர்கள் இருக்கும் போது தமிழில் பேசாமல் வேறு மொழியில் பேசினால் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் அவர் தமிழில் பேசினார்.

ஆனால் அவர் பேசிய தமிழை பார்த்து மாணவர்கள் வேறு விதமான கைதட்டினார்கள். எனவே தான் நான் அவரை காப்பாற்றுவதற்காக உங்கள் மொழியிலேயே பேசுங்கள் என்று கூறினேன். தமிழை கொல்வதற்கு வேறு ஆள் யாராக வருவார்கள். எனவே நீங்கள் உங்கள் மொழியிலேயே பேசுங்கள் என்று நான் தான் கூறினேன்.

தமிழில் பேச முயற்சியுங்கள்

ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் நீங்கள் வேறு மொழிகளில் பேசினால் பரவாயில்லை. எல்லா நிகழ்ச்சிகளிலுமே வேறு மொழியில் பேசலாம் என்று நினைக்காதீர்கள். இது போன்று ஒவ்வொரு விழாவிலும் நீங்கள் முயற்சி செய்யுங்கள். தொடர்ந்து முயற்சி செய்து தமிழில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதிகாரிகள் மேடையில் தமிழில் பேசி அரசின் திட்டங்களை மக்களிடம் எளிதாக கொண்டு செல்ல வேண்டும்.

இங்கு தலைமை செயலாளர் இருக்கிறார். எல்லா கோப்புகளும் தமிழில் வருகிறது என்றாலும் ஒன்றிரண்டு கோப்புகள் ஆங்கிலத்தில் வருகிறது. அந்த நிலை மாறி இனி எல்லா கோப்புகளும் தமிழில் தான் இருக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமல்லாமல் யாராக இருந்தாலும் இனி தமிழில் பேச வேண்டும். அதற்கேற்ப தமிழில் பேச பழகி கொள்ள வேண்டும்.

செம்மொழி மாநாட்டுக்குப் பலன் இல்லாமல் போய் விடும்

செம்மொழி மாநாட்டுக்கு பிறகாவது அதிகாரிகள் தமிழில் பேச தயக்கம் கொள்ள வேண்டாம். அகில இந்திய பணிகளில் தேறும் அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவர்கள் ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசுவது தமிழ் மொழிக்கு நல்லது அல்ல. இல்லையென்றால் எத்தனை தமிழ் மாநாடுகள் நடத்தினாலும் பலன் இல்லாமல் போய்விடும். கூடுமானவரை அதிகாரிகள் தமிழில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பபூங்கா பற்றி இங்கு பேசியவர்கள் நிறைய விளக்கி இருக்கிறார்கள். இந்த பூங்கா மேலும் வளர வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பு இல்லை என்ற தொல்லை ஒழியட்டும். சென்னை தரமணியில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் டைடல் பார்க்கை திறந்து வைத்தார். அதன் பின்னர் இப்போது கோவையில் தகவல் தொழில்நுட்பபூங்கா திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளதை நான் பெருமையாக கருதுகிறேன் என்றார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக