ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி கற்றுத் தரும் வித்தியாச கணக்கு வாத்தியார்!

அந்தமான்: கணக்கு வாத்தியார் என்றால் அல்ஜீப்ராவும், ஜியாமெட்ரியும் தான் நடத்துவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்தமானில் சற்று வித்தியாசமான கணக்கு வாத்தியார் ஒருவர் உள்ளார்.

அவரது பெயர் பென்சி ஜாய். இவர் கணக்கைத் தவிர ஆமைகள் இருப்பிடத்தை பாதுகாக்கவும், சுற்றுலாப் பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், காகித பைகளை செய்யவும் கற்றுத் தருகிறார். அந்தமான் நிக்கோபார் தீவுகள் திகிபூர் சுபாஷ்கிராமில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணி புரிகிறார்.

பென்சி ஜாய் மற்ற ஆசிரியர்களைப் போன்று காலையில் பள்ளிக்குச் சென்று மாலை வீடு திரும்புகிறார். ஒரு தலைமுறைக்கு முன்னர் இவரின் குழந்தைப் பருவ நண்பர் ஒருவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பற்றி எழுச்சி ஊட்டினார். ஹேவ்லாக் தீவுகளில் உள்ள பள்ளியில் இவருக்கு வேலை கிடைத்தபோது மாணவர்களுக்காக ஈகோ கிளப்பை உருவாக்கி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார்.

இந்த கிளப் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று துண்டு பிரசிரங்களை விநியோகம் செய்யத் தொடங்கியது. இதையடுத்து மாணவர்கள் வீடு வீடாகச் சென்று பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டிற்காக கடைக்காரர்களிடம் கொடுக்கின்றனர். மேலும், கிளப் உறுப்பினர்கள் கடைக்குச் செல்லும் போது துணிப்பையைத் தான் உபயோகிக்கின்றனர். இந்த மாணவர்கள் ஆமைகள் வந்து தங்கும் ராம் நகர் கடற்கரையை சுத்தம் செய்துள்ளனர்.

இது குறித்து ஜாய் கூறியதாவது,

ஒருவரால் மட்டும் எப்படி சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்று என்னிடம் நிறைய பேர் கேட்பதுண்டு. நீங்கள் உங்கள் பங்கை அளித்தால் எல்லோரும் பின்பற்ற மாட்டார்கள். ஆனால், ஒன்றிரண்டு பேர் பின்பற்றுவார்கள். இவ்வாறே மற்றவர்களும் பின்பற்றத் தொடங்குவார்கள் என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டிற்கான சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம் வழங்கும் சுற்றுச்சூழல் கல்வி விருதைப் பெற்றவர் ஜாய் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக