வியாழன், 26 ஆகஸ்ட், 2010

19 மாதங்களில் 170 இராணுவ வீரர்கள் தற்கொலை!


கடந்த ஒன்றரை ஆண்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 170 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தப் போக்தைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து ஏ.கே.அந்தோணி கூறியதாவது :

2009ஆம் ஆண்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 111 பேரும் இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் வரை 59 வீரர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தப் போக்கைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

மன அழுத்தம், டென்ஷனில் இருந்து விடுபடுவது குறித்து வீரர்களுக்கு தகுதி வாய்ந்த மனநல நிபுணர்கள், மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். கலந்தாய்வுக் கூட்டங்கள், கருத்தரங்கு, விவாத நிகழ்ச்சிகள் ஆகியவை மூலம் வீரர்களின் குறைகளை உயரதிகாரிகள் கண்டறிந்து அவற்றை தீர்க்கின்றனர்.

விடுமுறை எடுப்பதில் வீரர்களுக்கு கெடுபிடி விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. விடுமுறை முடிந்து பணிக்கு‌த் திரும்புகிறவர்களை ரெஜிமெ‌ண்ட் மருத்துவ அதிகாரி சோதனை செய்து, விசாரணை நடத்துவார். அவர்களிடம் மன அழுத்தம், விர‌க்திக்கான அறிகுறிகள் தெரிந்தால் மனதை தெளிவுபடுத்தும் கூர்நோக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர்.

வீரர்களின் மனநலனை அதிகரிக்கும் வகையில் மதத் தலைவர்களின் போதனை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. யோகா, பிராணாயாமம் (சுவாச பயிற்சி) ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வீரர்களுக்கு தரமான உணவு, உடை வழங்கப்படுகிறது. மணமான வீரர்கள் குடும்பத்துடன் தங்குவதற்கும் இடவசதிகள் அளிக்கப்படுகின்றன எ‌ன்று ‌அ‌ந்தோ‌ணி கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக