வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

ஸ்விப்ட், ஐ20, ஃபியட் பன்டோ: மூன்று ரக கார்கள், முதல் மரியாதை யாருக்கு?


கார் விரும்பிகளின் கண்களைக் கவரும் வகையில் இந்தியச் சந்தையில் நடை போட்டு வரும் மூன்று முக்கிய கார் கள் ஒவ்வொரு வகையில், வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.

அதுகுறித்த ஒரு பார்வை...

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இப்போது வேகமாக பிரபலமாகி வருவது ஹேட்ச்பேக் (Hatchback) வகை கார்கள். ஹேட்ச்பேக் என்பது பின் சீட் உள்ள பகுதியில், தேவைப்பட்டால் சீட்களை தூக்கி மடித்து விட்டு சாமான்களை போட்டு வைத்துக் கொள்ளலாம். தேவையில்லாவிட்டால் ஆட்கள் அமர்ந்து செல்லலாம்.

இந்த வகை ஹேட்பேக் வகை கார்கள் ஐரோப்பாவில் மிகவும் பிரபலம். தற்போது இந்தியாவிலும் பிரபலமடைந்து வருகிறது.

ஒவ்வொரு கார் நிறுவனமும் ஹேட்ச்பேக் மாடல்களை தயாரிக்க துவங்கி விட்டன. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹேட்ச்பேக் வகை கார்கள் கிட்டத்தட்ட 85 சதவீத அளவுக்கு விற்பனையாகி விடுகிறதாம்.

அந்த வகையில் தற்போது பிரபலமாக உள்ள மூன்று ஹேட்ச்பேக் கார்கள் - மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ20 மற்றும் ஃபியட் பன்டோ.

மூன்றுமே பார்க்க அட்டகாசமாக உள்ளன. பல்வேறு தனித்துவம் கொண்ட சிறப்பம்சங்களும் உள்ளன. இதில் எதை வாங்குவது, எதை விடுவது என்பதில்தான் வாடிக்கையாளர்களுக்குக் குழப்பம்.

ஹூண்டாய் ஐ20 மாடலைப் பொறுத்தவரை, விசாலமான இட வசதியுடன் கூடியது. என்ஜின் இந்திய சாலைகளில் அதிக திறனுடன் செயல்படும். தொழில்நுட்ப அம்சங்கள் பலவும் கவர்ச்சிகரமானதாக அமைந்துள்ளன.

ஆனால் மைலேஜ், பெட்ரோல் லிட்டருக்கு 11 முதல் 15 கி.மீ மட்டுமே தருவதில்லை. அதே போல் டீசல் இன்ஜினிலும் லிட்டருக்கு 13 முதல் 16.5 கி.மீ மட்டுமே கிடைக்கிறது.

மாருதி ஸ்விப்ட் மற்றும் பன்டோ வகை கார்களின் விலை மற்றும் மைலேஜ் சிறப்பாக உள்ளதாம். இட வசதி குறித்து வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் திருப்தி இல்லை.

ஸ்விப்ட் காரின் டிடிஐஎஸ் இன்ஜின் நல்ல சக்தியுடனும், எரிசக்தி திறனுடனும் இயங்குவதாக கூறப்படுகிறது.

85 பிஎஸ், 1.2 லிட்டர் 4 சிலிண்டர் கே-சீரீஸ் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 75 பிஎஸ் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் இன்ஜின் என இரண்டு வகையில் இந்த மாடல்கள் கிடைக்கின்றன.

இரண்டு இன்ஜின்களிலும், 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்சுடன் கிடைக்கின்றன. சிக்கனமான எரிசக்தி திறன் காரணமாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

டீசல் இன்ஜின் லிட்டருக்கு 15 முதல் 19 கி.மீ.யும், பெட்ரோல் லிட்டருக்கு 12.5 முதல் 17 கி.மீ.யும் கிடைக்கிறது.

மைலேஜ் அடிப்படையில் பார்த்தால், ஹூண்டாய் மற்றும் ஸ்விப்ட் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட இடத்தைப் பிடிக்கிறது பன்டோ. இதுவும் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையிலும் கிடைக்கிறது.

பன்டோவின் டீசல் இன்ஜின் 1.3எல், 1248சிசி, மல்டிஜெட் டர்போ இன்ஜின், புதிய விஜிடி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் காரின் இயக்கம் மிகவும் அற்புதமான அனுபவத்தை தருவதாக டெஸ்ட் டிரைவ் செய்த வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

ஹூண்டாய் ஐ20யும், பன்டோவும் பீரிமியம் வாடிக்கையாளர்கள் மத்தியிலும், ஸ்விப்ட் மாடல் சற்று நடுத்தர பிரிவினரிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளன.

நல்ல உள்கட்டமைப்பு மற்றும் இன்ஜின் சக்தி ஆகியவற்றுக்கு ஹூண்டாய் ஐ20, விலை மற்றும் மைலேஜ் அம்சத்துக்கு ஸ்விப்ட் மற்றும் பன்டோவும் ஏற்புடையதாக காணப்படுவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

டெல்லியில் ஷோரூமிற்கு முந்தைய விலையாக ஹூண்டாய் ஐ20 மாடல்கள் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் முதல் ரூ.7 லட்சத்து 75 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன.

மாருதி ஸ்விப்ட் மாடல்கள் ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஃபியட் பன்டோ சராசரியாக ரூ. 4.2 முதல் 6.3 லட்சம் வரை ஷோரூமிற்கு முந்தைய விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக