ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்காது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்காது என்று திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.
மக்களவையிலி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ. 1 உயர்த்தப்பட்டது. இதனையடுத்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 3 வரை உடனடியாக அதிகரித்தது.
இதன் விளைவாக லாரி வாடகைக் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த காரணங்களால் அத்தியாவசியப் பொருள்கள் உள்பட அனைத்துப் பொருள்களின் விலையும் தொடர்ந்து உயரும். இதனால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில, தனியார் தொலைக்காட்சிக்கு மான்டேக் சிங் அலுவாலியா சனிக்கிழமை பேட்டி அளிக்கையில், பெட்ரோலியப் பொருள்களுக்கு உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளதால் பண வீக்கமும் அதிகரிக்கும் என்று பயப்படத் தேவையில்லை. உண்மையாகக் கூற வேண்டுமானால் இது மிகவும் சரியான நடவடிக்கைதான். பெட்ரோலியப் பொருள்களுக்கு தொடர்ந்து மானியம் வழங்க முடியாது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் சமநிலையிலான பட்ஜெட்.
சரக்கு-சேவை வரி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். இந்த வரிக்கு மாநில அரசுகள் ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இருந்த போதிலும் வரியை அமல்படுத்தும் விஷயத்தில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பை பிரணாப் பெற்றுவிடுவார் என்று நம்புகிறேன்.
இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. எனினும் இது குறித்து அதிகம் கவலையடையத் தேவையில்லை. உலக அளவில் பொருளாதார நிலையில் நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும். நான்காவது காலாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8 விழுக்காட்டை நெருங்கும் என்று அலுவாலியா நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த நிதியாண்டில் மூன்றாவது காலாண்டில் வேளாண் உற்பத்தி 2.8 விழுக்காடு குறைந்து விட்டது. இதற்கு பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வறட்சியே காரணம். அடுத்த ஆண்டில் வேளாண் உற்பத்தி ஆறு முதல் 7 விழுக்காடு வரை இருக்கும் என்று மான்டேக்சிங் அலுவாலியா கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக