திங்கள், 15 பிப்ரவரி, 2010

சலுகைகளை திரும்ப பெறும் போது பாதிப்பு: சுப்பாராவ்


பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள ஊக்குவிப்பு சலுகைகளை அரசு திரும்ப பெறும் போது, இதன் பாதிப்பு, ரிசர்வ் வங்கி சுயேச்சையாக இருப்பதற்கு அபாயமாகலாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூறினார்.

மும்பையில் நேற்று நிதி நெருக்கடியும் மத்திய வங்கிகள் சந்திக்கும் சவால்களும் என்ற தலைப்பில் சர்வதேச ஆய்வு மாநாட்டில் சுப்பாராவ் பேசும் போது, பொருளாதார பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டுவரும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, ஊக்குவிப்பு சலுகைகளை குறைக்கலாம் என்று திட்டமிடுகின்றனர். அதனால், அரசு நிதிக் கொள்கைக்கும் ரிசர்வ் வங்கிகளுக்கும் இடையே பதட்டம் வரும். ஆனால், இந்த விஷயத்தில் பெரிய அளவில் பதட்டம் வர வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர். இப்பிரச்னை தற்காலிகமானது அல்ல.

தற்போதைய நிலையில் உலகின் முன்னேறிய நாடுகளின் கடன்சுமை, 2007 இல் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 78 விழுக்காடாகும். இது 2014 ஆம் ஆண்டு 118 விழுக்காடாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு நாட்டில் உள்ள ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையின் சுதந்திரம் பாதிக்கப்படும். ஐ.எம்.எப்., தகவலின் படி வளர்ந்த நாடுகள் கடன் வாங்கும் நிலையில் இருந்து தப்ப முடியாது. ஏனெனில், சமுதாயப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டும்.

இதுவரை ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையை ரிசர்வ் வங்கி சந்தித்து, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உரிய நடைமுறைகளை மேற் கொண்டது. இப்போது வரக்கூடிய தாக்குதலை, வெளிப்படையான, திறமையான அணுகுமுறையால், அதிக கண்காணிப்புடன் சமாளிக்க வேண்டும். பல பக்கங்களிலும் இருந்து வரும் மூலதன நிதி பொருளாதார ஸ்திரத்தன்மையை குறைக்கும். அயல்நாடுகளில் இருந்து வரும் மூலதனம் குறித்தும் அதிக எச்சரிக்கையாக ரிசர்வ் வங்கி இருக்கிறது என்று சுப்பாராவ் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக