புதன், 24 பிப்ரவரி, 2010

மின்பற்றாக்குறையை தீர்க்க 2000 மெகாவாட் மின்சாரத்தை வாங்குகிறது தமிழகம்.


சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய வருகிற மே மாதம் வரை 2000 மெகாவாட் மின்சாரத்தை வாங்கவுள்ளது தமிழக அரசு.

இந்த ஆண்டு தமிழகத்தின் மின் தேவை 8 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் மின் தேவை மேலும் அதிகமாக இருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

2000 மெகாவாட் மின்சாரத்தை வாங்கும் முடிவு முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியி்ட்டுள்ள அறிக்கையில், மத்திய தொகுப்பிலிருந்து வருகிற ஜூன் மாதத்திலிருந்து தமிழகம் தனது பங்கான 1607 மெகாவாட் மின்சாரத்தைப் பெறும். அதுவரை பிற வழிகளிலிருந்து மின்சாரத்தை வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தமிழகத்தின் மின் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மின் திட்டங்களை விரைவுபடுத்துமாறும் முதல்வர் கருணாநிதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வட சென்னையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் 1200 மெகாவாட் திறனுடைய யூனிட்-1, யூனிட்-2 மின் திட்டங்கள் முறையே 2011ம் ஆண்டு மே மற்றும் நவம்பரில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2010 ஜூன் முதல் 2011 மே மாதத்திற்கு இடையிலான கால கட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம், நெய்வேலி, சிம்மாத்ரி ஆகிய மின் திட்டங்களிலிருந்து தமிழகத்திற்கு 1607 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

கடந்த கோடை காலத்தில் தமிழகத்தின் மின் தேவை 9000 மெகாவாட்டாக அதிகரித்திருந்தது. இது அதுவரை இல்லாத அளவாகும். வருகிற கோடைகாலத்தி்ல இந்தத் தேவை 10,000 மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் மின் உற்பத்தி 8200 மெகாவாட் மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக