புதன், 24 பிப்ரவரி, 2010

கூந்தன்குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்


நெல்லை: நெல்லை அருகே உள்ள கூந்தன்குளம் சரணாலயத்திற்கு, இனப்பெருக்கத்திற்காக வரும் வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகளவில் காணப்படுகிறது.

சைபீரியா, ஜெர்மன் மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் வாழும் பறவை இனங்களான பார்ஹெட்டட் கூஸ், சோவல்லார், பின்டெய்ல், காமன் டீல், பிளெமிங்கோ, கூட் ஆகியவை தற்போது கூந்தல்குளத்திற்கு வரத்தொடங்கியுள்ளன.

இது தவிர பெலிகான் பெயிண்ட், ஓயிட் ஐபிஸ், கிரே ஐபிஸ், கிரே ஹெரன், பர்பிள் ஹெரன், ஸ்பூன்பில், காட்டன் டீல், இந்தியன் மூர்கென், கிங் பிஷர் ஆகிய இந்திய வெளிமாநில பறவைகளும் குளத்தில் ஆழமான பகுதியில் கூடு கட்டியுள்ளன.

தரையில் கூடு கட்டி முட்டையிடும் மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, பவளக்கால் உள்ளான், வானம்பாடி ஆகிய உள்ளூர் பறவைகளும் கூந்தன்குளத்தில் முகாமிட்டுள்ளன.

பறவைகளை காண ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆராய்ச்சி மாணவிகளும் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 கி.மீ தொலைவில் நாங்குனேரி தாலுகாவில் அமைந்துள்ள கூந்தன்குளம் சரணாலயம் கடந்த 1994ம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டது.

இங்கு சுற்றுலா பயணிகள் தங்கவும், பறவைகள் பற்றி அறிந்து கொள்ள தொலை நோக்கி கருவிகள், கண்காட்சி கோபுரம் ஆகியவையும் வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

எனினும் முறையான பேரூந்து வசதி இல்லாததால் நெல்லை மாவட்டத்தினர் கூட குறித்த நேரத்திற்கு சென்று திரும்ப முடியாத நிலை உள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக