வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

சிறந்த தமிழ் சாப்ட்வேர் விருது!


சென்னை: தமிழில் சிறந்த மென்பொருள் தயாரித்துள்ள பனேசியோ டிரீம்வீவர்ஸ் சாப்ட்வேர் நிறுவனத்துக்கு கணியன் பூங்குன்றனார் விருது வழங்கப்படுகிறது. கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இந்த விருதினை வழங்குகிறார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆண்டுதோறும் வெளிவரும் தமிழ் மென்பொருட்களுள் சிறந்த மென்பொருள் ஒன்றைத் தேர்வு செய்து, அதை உருவாக்கியவருக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் வைரமணி மொழிகளை வையகத்துக்குத் தந்துள்ள 'கணியன் பூங்குன்றனார்' பெயரில் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி ஏற்கனவே ஆணையிட்டு உள்ளார்.

அதன்படி, 2007-08ம் ஆண்டின் கணியன் பூங்குன்றனார் விருதுக்குத் தகுதி வாய்ந்தவரைத் தேர்வு செய்வதற்காகாத் தமிழக அரசு அமைத்துள்ள வல்லுனர் குழு, 'பனேசியோ டிரீம் வீவர்ஸ் சாப்ட்வேர் நிறுவனம்' உருவாக்கியுள்ள 'பனேசியோ டிரீம் வீவர்ஸ் இலவச மென்பொருள் மற்றும் ஓப்பன் சோர்ஸ் முயற்சி' எனும் மென்பொருள், தமிழக அரசின் கணினி மொழி கொள்கைக்கேற்பவும், போட்டிக்கு வரப்பெற்ற மென்பொருட்களுள் சிறந்ததாகவும் இருப்பதாக முடிவு செய்து, பனேசியோ டிரீம் வீவர்ஸ் சாப்ட்வேர் நிறுவனத்தை விருதுக்குத் தேர்வு செய்துள்ளது.

அதன்படி, பனேசியோ டிரீம் வீவர்ஸ் சாப்ட்வேர் நிறுவனத்துக்கு கணியன் பூங்குன்றனார் விருது, கோவை மாநகரில் ஜுன் மாதம் 23ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை நடைபெற உள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைத்து நடத்தப்படவுள்ள உலகத்தமிழ் இணைய மாநாட்டில் முதல்வர் கருணாநிதி வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக