ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

புதிய வரிகள் மூலம் ரூ.40 ஆயிரம் கோடி.


பெட்ரோலிய பொருட்கள் மீதான உற்பத்தி வரியை மீண்டும் விதித்துள்ளதாலும், மற்ற உற்பத்தி வரியை அதிகரித்து இருப்பதால் அரசுக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி கிடைக்கும். அதே நேரத்தில் வருமான வரி சலுகைகளால் ரூ.21 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று மத்திய வருவாய் துறை செயலாளர் சுனில் மித்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிக்கி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுனில் மித்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த கூடுதல் வரி வருவாயில் ரூ.14 ஆயிரம் கோடி உற்பத்தி வரியை அதிகரித்து இருப்பதாலும், ரூ.26 ஆயிரம் கோடி பெட்ரோலிய பொருட்களின் மீது மீண்டும் உற்பத்தி வரி விதிக்கப்பட்டு இருப்பதாலும் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

மக்களவையில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில், பொருளாதார நெருக்கடி காரணமாக 8 விழுக்காடாக குறைக்கப்பட்ட உற்பத்தி வரி, தற்போது 10 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலிய பொருட்கள் மீதான உற்பத்திவரி நீக்கப்பட்டது. இது மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சேவை வரி பட்டியலில் புதிதாக 8 விதமான சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சேவை வரியில் கூடுதலாக அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கிடைக்கும். உள்நாட்டில் உற்பத்தியாகும் நிலக்கரி, அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மீது செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக அரசுக்கு ரூ.2,000 கோடி கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக