வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

நெருங்குகிறது காதலர் தினம்: சூடு பிடிக்கும் 'காண்டம்' விற்பனை!


டெல்லி: காதலர் தின விழாவை முன்னிட்டு, சாக்லேட், ரோஜாப் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகரிப்பதன் கூடவே, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் படுஜோராக நடக்கிறதாம்.

காதலர் தினத்தை குறிப்பிட்ட ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதற்கு பதிலாக காதல் வாரமாகவே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த சூழலை பயன்படுத்தி, ஆணுறை விற்பனையாளர்களும், தங்களின் விற்பனையை உயர்த்த தேவையான அனைத்து வழிகளையும் கையாள்கின்றனர்.

ஆண்டுதோறும் காதலர் தின சமயத்தில் சராசரியாக 20 சதவீதம் ஆணுறை மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கூடுதல் விற்பனை இருப்பதாக 24 மணி நேர ஆணுறை விற்பனை மையமான எஸ்2காண்டம் நிறுவனத்தின் இயக்குனர் சிஷிர் மிக்லானி தெரிவித்தார்.

காதலர் தினத்தையொட்டி சில சலுகைகளையும் மிக்லானியின் நிறுவனம் அறிவித்துள்ளதாம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆணுறைகளை வாங்கினால் இலவசமாம். மேலும் வேல்யூ ஆடட் பேக்கேஜ்களையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு ஆணுறை வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல.

சுப்லால் என்ற மருந்துக் கடை உரிமையாளர் கூறுகையில், சிலர் கூச்சப்பட்டுக்கொண்டு போன் மூலமாக ஆர்டர் கொடுப்பார்கள். சில இளைஞர்கள் கடைக்கு வந்து தயக்கத்துடன் கேட்பார்கள். எப்படியானாலும் ஆணுறை விற்பனை இந்த சமயத்தில் கூடுதலாகவே இருக்கும் என்றார்.

சமீபத்திய சர்வேக்கள் இந்திய ஆண்களும் பெண்களும் பாதுகாப்பான உடலுறவு விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வு அடைந்துவிட்டதாக கூறுகின்றன.

ஆண்களைப் போலவே பெண்களும் கருத்தடை மாத்திரைகளை கூச்சமின்றி பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அதோடு, ஆன் லைன் வர்த்தகம் பெருகி விட்ட சூழலில் பெண்கள் கருத்தடை மாத்திரைகள் பெறுவது சுலபமானதாகவும், நடைமுறை சிக்கலின்றி இருப்பதாகவும் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக