புதன், 6 ஜனவரி, 2010

ஜவுளி உற்பத்தி 11% உயர்வு


புதுடெல்லி : மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை ஜவுளி உற்பத்தி 11.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்தார்.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி), ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகியவை இணைந்து டெல்லியில் நேற்று மாநாடு நடத்தின. Ôஉலகில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இந்திய ஜவுளித் துறை மேம்பாடுÕ என்ற தலைப்பிலான அதில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் பேசியதாவது:
பிக்கி, ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் இணைந்து இந்த மாநாடு நடத்துவதில் மகிழ்ச்சி. நமது ஜவுளித் துறை சிக்கலான பாதையில் பயணிக்கும் நிலையில் இந்த மாநாடு முக்கியமானது. 2004ல் உற்பத்தி அளவுக் கட்டுப்பாடு விடுதலைக்குப் பிறகு நல்ல பலன் கிடைத்தது. ஜவுளி மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் (டப்ஸ்) உற்பத்தி கட்டமைப்பை அதிகரித்தோம். அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளில் ஆழமாக காலூன்றினோம்.
2007ல் டாலர் மதிப்பு சரிவாலும், அதைத் தொடர்ந்த சர்வதேச நிதி நெருக்கடியாலும் நமது வெளிநாட்டு சந்தைப் பங்கு பாதித்தது. அப்போது முதல் ஏற்றுமதி குறைந்தது. 2008&09ம் ஆண்டில் ஏற்றுமதி 5 சதவீதம் சரிந்தது. எனினும், உள்நாட்டு சந்தையில் நமது பெரும்பாலான உற்பத்திப் பொருட்கள் வாங்கப்பட்டது.

எனினும், ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி ஆகியவை மீண்டும் அதிகரிக்கும் அறிகுறிகள் தெரிகின்றன. துணி உற்பத்தி கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை 10.8 சதவீதம் உயர்ந்தது. இழை, நூல் உற்பத்தி முறை யே 21.3, 11.8 சதவீதம் அதிகரித்தது. ஸ்பன் நூல் உற்பத்தி 5.1 சதவீதம் உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக ஜவுளி உற்பத்தி 11.2 சதவீதம் அதிகரித்தது.

அதன் விளைவாக முன்னணி ஜவுளி நிறுவனங்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 2009 செப்டம்பருடன் முடிந்த 3 மாதங்களில் விற்பனை வளர்ச்சி வேகமெடுத்தது. நெசவு ஆலைகளில் விற்பனை வளர்ச்சி 19.7 சதவீதமாகவும், பின்னலாடை துறை விற்பனை வளர்ச்சி 8.9 சதவீதமாகவும், இழை விற்பனை 15.7 சதவீதமாகவும், ஆயத்த ஆடை விற்பனை 14.2 சதவீதமாகவும் அதிகரித்தது.

மார்ச் 2009 முதல் ஜவுளித் துறையில் அதிக முதலீடு செய்யப்படுகிறது. நெசவு ஆலைகள் 5 புதிய திட்டங்களில் ரூ.144 கோடி முதலீடு அறிவித்தன. பின்னலாடைத் துறை 20 புதிய திட்டங்களில் ரூ.257 கோடி முதலீடு அறிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக