திங்கள், 11 ஜனவரி, 2010

வாகனங்களை நிறுத்த இடமின்றி தவிக்கும் மக்கள்.


சென்னை போன்ற நகரங்களில், போதிய பார்க்கிங் இல்லாமல் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால், சாலைகள் குறுகி நெரிசல்கள் ஏற்படுகின்றன. இதுவும் விபத்துகளுக்கு ஒரு காரணமாக உள்ளது. பார்க்கிங் பிரச்னைகள் குறித்த ஒரு கண்ணோட்டம்...

நினைத்த இடத்துக்கு நினைத்த நேரத்தில் போக முடிவதால், கார் வைத்திருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று பலர் நினைக்கிறார்கள். சென்னையில் கார் வைத்திருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் அல்ல. நினைத்த இடத்துக்கு போக முடியும் என்பது உண்மை; போகிற இடத்தில் காரை நிறுத்த இடம் கிடைக்காமல் அவர்கள் தவிப்பது மற்றவர்களுக்கு புரியாது. கோயில், மார்க்கெட், ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், வங்கி, ஓட்டல் என்று எங்கே சென்றாலும் கார் நிறுத்த இடம் தேடி அலைய நேர்கிறது. இடம் கிடைக்காததால் நிறுத்தாமலேயே வீட்டுக்கு திரும்பிய அனுபவம் எல்லோருக்கும் ஒரு முறையாவது நேர்ந்திருக்கும்.
முப்பது லட்சத்துக்கு மேல் வாகனங்கள் ஓடும் சென்னையில் கார் நிறுத்துமிடங்கள் வெறும் 99 என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இப்போதுதான் அதை 142 ஆக அதிகரித்துள்ளனர். இந்த இடங்கள் தவிர மற்ற எல்லாம் ‘நோ&பார்க்கிங்’ பகுதிகள். இதனால் கடைக்காரர்கள் சாலைகளை ஆக்கிரமித்து வாடிக்கையாளர்களுக்கு கார் நிறுத்த இடம் தருகின்றன.
முக்கிய சாலைகளிலும் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இச்சாலைகளில் உள்ள வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கடைகள் தங்கள் கட்டிடம் முன்பு வேறு வாகனங்கள் நிறுத்த முடியாதபடி தடுப்புகள் வைத்து இடம் பிடிக்கின்றன. இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால், நூறடி சாலை 70 அடியாக குறுகி விடுகிறது. நெரிசல் அதிகமாகிறது.

பெரும்பாலான அலுவலகங்களில் ‘பார்க்கிங் ஏரியா’ கிடையாது. வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று போர்டு மாட்டியிருக்கிறார்கள். ஒரு வேளை இடம் இருந்தாலும், அங்கு பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு மட்டும்தான் உள்ளே செல்ல அனுமதி. மற்றவர்கள் வெளியே நிறுத்த வேண்டும். அப்படி நாற்பது, ஐம்பது வாகனங்கள் சேரும் வரை பார்த்திருந்து போக்குவரத்து போலீசுக்கு போன் மூலம் தகவல் சொல்லும் இன்பர்மார்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் அந்த கட்டிடத்தின் செக்யூரிடி ஊழியரே இந்த பணியையும் செய்வார்.

உடனே போலீஸ் வந்து டூவீலர்களை தூக்கிச் செல்லும்; பெரிய வண்டிகளுக்கு பூட்டு மாட்டிச் செல்லும். இதில் போலீசுக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது. அதில் ஒரு தொகை அரசுக்கு சேர்கிறது. முக்கிய சாலைகளில் மட்டுமல்ல; பெரிய குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளிலும் இதே நிலைதான்.

எந்த பெரிய அபார்ட்மென்டிலும் விருந்தினர் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. திருமண மண்டபங்கள் இருக்கும் இடங்களில் தாறுமாறாக கார்கள் நிற்பதால் அந்த பகுதியில் நடந்து செல்வதே
கஷ்டம்.
இதற்கெல்லாம் என்ன தீர்வு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக