திங்கள், 18 ஜனவரி, 2010
எல்லாருக்கும் பணத்தை திருப்பித் தருவேன்
சென்னை : சென்னை அண்ணா சாலையில் இயங்கி வந்த ஜே.பி.ஜே. நிறுவனம், குறைந்த விலையில் நிலம் விற்பதாகக் கூறி பல கோடி ரூபாய் சுருட்டியதாக புகார் எழுந்தது.
இந்நிறுவன உரிமையாளர் ஜஸ்டின் தேவதாசை பெங்களூர் போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் நிலமோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவில் மட்டும் 1,300 பேர் புகார் செய்தனர். இதையடுத்து, அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், பெங்களூர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து, எழும்பூர் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜஸ்டின் தேவதாஸ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வில்லியம்ஸ் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி அமரவர்மன், ஜஸ்டின் தேவதாசை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை நடத்தப்படுகிறது. முன்னதாக, எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் ஜஸ்டின் தேவதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கையில் கட்டு போட்டிருப்பது ஏன்? போலீசார் துன்புறுத்தினார்களா?
பெங்களூர் சிறையில் இருக்கும்போது மயங்கி விழுந்து விட்டேன். கையில் அடிபட்டதால் கட்டுப் போடப்பட்டுள்ளது.
ரூ.1000 கோடி மோசடி புகார் குறித்து?
ரூ.1000 கோடி மோசடி செய்யவில்லை. ரூ.26 கோடி அளவில் மட்டுமே பணம் கொடுக்க வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க தயாராக உள்ளேன். 350 ஏக்கருக்கு மேலாக நிலம் உள்ளது. அதை விற்பனை செய்தால் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியும்.
உங்களின் இந்த நிலைக்கு காரணம் என்ன?
என்னுடைய ஊழியர்களும், என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு நிலம் கொடுக்காதவர்களும்தான் காரணம். சிறையில் இருந்து வெளியில் வந்து, என்னுடைய உண்மையான நிலையை மக்களுக்கு விளக்குவேன் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக