சனி, 16 ஜனவரி, 2010

மெரினாவில் லட்சம் பேர் குவிந்தனர்


சென்னை : காணும் பொங்கலை கொண்டாட மெரினாவில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, 4 நாட்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று காணும் பொங்கலை மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பெரியவர்களை சிறியவர்கள் வணங்கி ஆசி பெற்றனர். ஒருவருக்கொருவர் பரிசு, பணம் வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

காணும் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடுவதற்காக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொழுதுபோக்கு மையங்களுக்கு காலையிலேயே புறப்பட்டு விட்டனர். மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ், நீலாங்கரை, திருவான்மியூர் கடற்கரைகளில் காலையில் இருந்தே மக்கள் குவியத் தொடங்கினர். சென்னை சுற்றுலா பொருட்காட்சி, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, காந்தி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

புறநகர் பகுதிகளான கோவளம், மாமல்லபுரம், முட்டுக்காடு மற்றும் தீம் பார்க்குகளிலும் கூட்டம் அலைமோதியது. சென்னை நகரம் முழுவதும் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மெரினா கடற்கரையில் மட்டும் 2,000 போலீசார் நிறுத்தப்பட்டனர். மெரினாவில் மக்கள் குளிக்கவும், படகுகளில் உல்லாச சவாரி செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடலில் யாரும் இறங்காத வகையில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.

மெரினாவில் 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் வைத்து போலீசார் கண்காணித்தனர். 4 தற்காலிக போலீஸ் நிலையங்களும், கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டிருந்தன. ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை தகவல்களை போலீசார் அளித்து வந்தனர். குதிரைப் படை வீரர்கள் கடற்கரையோரம் ரோந்து சென்றனர்.
தடுப்பை மீறி கடலுக்குள் சென்றவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பினர். கடலோர காவல் படை ஹெலிகாப்டர், கடற்கரையில் தாழ்வாக பறந்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டது. போலீசார் சாதாரண உடைகளிலும் ரோந்து சுற்றி வந்தனர்.

பெண்களை கிண்டல் செய்பவர்கள், ‘இடி’ மன்னர்களை பிடிக்க பெண் போலீசாரும் சாதாரண உடைகளில் ரோந்து சுற்றிய வண்ணம் இருந்தனர்.

மெரினாவில் மட்டும் லட்சத்துக்கும மேற்பட்ட மக்கள் குவிந்தனர். இதனால் ஏராளமான தற்காலிக கடைகள் உருவாகின. பலர் சிறிய ராட்டினங்களில் வயது வித்தியாசம் இல்லாமல் சுற்றினர். வெயிலையும் பொருட்படுத்தாமல் கடற்கரை மணலில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
பொதுமக்கள் வசதிக்காக நகரின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா மையங்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருப்போரூர், திருநீர்மலை, திரு விடந்தை உள்ளிட்ட கோயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக