செவ்வாய், 26 ஜனவரி, 2010
ராட்சத சிலிண்டரால் ராயபுரத்தில் பரபரப்பு
சென்னை : ஒரிசா மாநிலம் ஹஜிரா என்ற ஊரில் இருந்து, சென்னை துறைமுகத்துக்கு 615 டன் எடை கொண்ட ராட்சத எரிவாயு சிலிண்டர், கப்பல் மூலம் கடந்த மாதம் கொண்டு வரப்பட்டது. மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்துக்காக இது வந்துள்ளது.
ஆறு ராட்சத கிரேன்கள் மூலம் சிலிண்டரை நேற்று கப்பலில் இருந்து இறக்கினர். ஹைட்ராலிக் டிரைலர் வாகனத்தில் அது ஏற்றப்பட்டது. அந்த டிரைலர் 420 டயர்கள் கொண்டது. 150 அடி நீளம் கொண்டது. சிலிண்டரை ஏற்றியபின் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு செல்ல துறைமுகத்தில் இருந்து டிரைலர் வெளியே வர முற்பட்டது.
சரக்கு ரயில்கள் செல்லும் தண்டவாளம் பாதிக்கப்படாமல் இருக்க ராட்சத இரும்பு பிளேட் போட்டு அதன்மூலம் டிரைலர் கடந்தது. எனினும் நீளம் அதிகமாக இருந்ததால் கேட் எண் 3, பக்கவாட்டு சுவரை உடைத்து நேற்று மாலை ராட்சத டிரைலர் ராயபுரம் கிழக்கு மாதா தெருவுக்கு கொண்டு வரப்பட்டது.
வெளியில் வந்த ராட்சத டிரைலரையும் அதிலிருந்த சிலிண்டரையும் பார்த்து அப்பகுதியினர் அதிசயித்தனர். மக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராயபுரம், எண்ணூர் சாலை வழியாக எர்ணாவூர் மேம்பாலத்தில் சென்றால் பாலம் தாங்காது. அதனால் அதன் கீழ் உள்ள ரயில்வே கேட் வழியாக செல்ல உள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இரவில் மட்டுமே டிரைலரை இயக்கிச் செல்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக