செவ்வாய், 26 ஜனவரி, 2010
டெல்லியில் மூடு பனிக்கிடையே குடியரசு தின அணிவகுப்பு
இந்தியாவின் 60வது குடியரசு தினமான இன்று தலைநகர் டெல்லியில் நிலவிய கடுமையான மூடுபனியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க குடியரசு தின அணிவகுப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இன்று காலை 9.45 மணிக்கு டெல்லியிலுள்ள அமர் ஜவான் நினைவுச் சதுக்கத்தில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மன்மோகன் சிங்.
அமர் ஜோதி சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் வணக்கம் செலுத்த, அவருடன் முப்படைகளின் தலைமைத் தளபதிகளும் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்தினர். அருகில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளை தலை கீழாக நிறுத்தி வணக்கம் செலுத்த, அஞ்சலி கீதம் முழங்கப்பட்டது.
அதன் பிறகு டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தின அணிவகுப்பு துவங்கியது. அணிவகுப்பு மரியாதையை ஏற்க வந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலையும், அரசு விருந்தினராக தென் கொரிய நாட்டின் பிரதமரையும் பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்றார்.
தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. கொடி வணக்கம் செலுத்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், நாட்டின் பாதுகாப்பிற்காக வீரசேவை புரிந்த மூவருக்கு இராணுவ உயரிய விருதான அசோக் சக்ராவை வழங்கி கெளரவித்தார்.
மேஜர் சிறிராம் குமார், மேஜர் மோஹித் சர்மா, ஹவில்தார் இராஜேஷ் குமார் ஆகியோருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மேஜர் மோஹித் குமாருக்கு பதிலாக அவரது மனைவி மேஜர் ரிஷிமாவும், ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியான குப்வாராவில் நடந்த மோதலில் வீரமாகப் போராடி உயிர் நீத்த ஹவில்தார் இராஜேஷ் குமாருக்கு வழங்கப்பட்ட அசோக் சக்ராவை அவரது மனைவியும் பெற்றுக் கொண்டனர்.
இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையை பறைசாற்றும் குடியரசு தின அணிவகுப்பினை அணிவகுப்பு கட்டளைத் தளபதி பரம்ஜித் சிங், தனி வாகனத்தில் வந்து குடியரசுத் தலைவருக்கு வணக்கம் செய்துச் செல்ல துவங்கியது.
டோக்ரா ரெஜிமெண்ட், 61வது குதிரைப் படை ஆகியோர் அணிவகுத்து வர, அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அதி நவீன போர் வாகனமான அர்ஜூனா டாங்கிகள் அணி வகுத்து வந்தன.
அவைகளைத் தொடர்ந்து ராக்கெட் ரெஜிமெண்ட் என்றழைக்கப்படும் பல்குழல் பீரங்கிப் படையும், போர்க் களத்தில் முன்னேற்றத்தை உறுதி செய்யும் சர்வாத்ரா பொறியல் படை வாகனங்களும், அவற்றைத் தொடர்ந்து களத்திலிருந்து தகவலளிக்கும் அதிநவீன தகவல் தொடர்பு மற்றும் சம்யுக்தா ராடார் படை வாகனங்களும் அணி வகுத்து வந்தன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக